தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளும், சில மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் (02/05/2021) அன்று எண்ணப்பட்டு, முடிவுகளும் வெளியாகியுள்ளது. கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வாக்கு எண்ணிக்கையை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் செய்திருந்தது. குறிப்பாக, தமிழகத்தில் (02/05/2021) காலை 08.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதைத் தொடர்ந்து, காலை 08.30 மணியளவில் இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மொத்தம் 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
வாக்கு எண்ணும் மையங்களில் மாநில காவல்துறையினர், துணை ராணுவப் படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, தேமுதிக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 3,998 பேர் போட்டியிட்டனர். இந்த நிலையில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதேவேளையில் சில மாவட்டங்களில் அனைத்து தொகுதிகளையும் வென்று அபார வெற்றியை அடைந்துள்ளது திமுக. கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுகள் நேற்று நடந்து முடிந்துள்ளது. கரூர் தளவாப்பாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையில், 4 தொகுதிகளிலும் கடும் போட்டி நிலவிய நிலையில், போராடி அனைத்து தொகுதிகளையும் திமுக கைப்பற்றி உள்ளது.
கரூர் மாவட்டம், 4 தொகுதிகளும், வாக்கு விபரங்களும்:
1.அரவக்குறிச்சி
2.கரூர்
3.கிருஷ்ணராயபுரம்
4.குளித்தலை
அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளா் இளங்கோ 93,369 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளா் அண்ணாமலை ஐபிஎஸ் 68,553 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்த பாஜக வேட்பாளா் மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு பின்னடைவு அடைந்தார். திமுகவும் போராடி 24,816 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியை தக்க வைத்தது.
கரூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளா் செந்தில் பாலாஜி 1,01,757 வாக்குககள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னால் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 89,309 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். காலை முதலே அதிமுக வேட்பாளா் ஏறுமுகமாக இருந்து வந்த நிலையில், இறுதியாக திமுக வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. திமுக போராடி 12,448 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியைத் தக்கவைத்தது.
கிருஷ்ணராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளா் சிவகாம சுந்தரி 96,540 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் முத்துக்குமார் 64,915 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றார். இதில் திமுக வேட்பாளா் சிவகாம சுந்தரி 31,625 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
குளித்தலை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளா் மாணிக்கம் பெற்ற மொத்த வாக்குகள் 1,00,829. அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் சந்திரசேகா் 77,289 பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மொத்தம் 23,540 வாக்குகள் அதிகம் பெற்ற திமுக வேட்பாளா் வெற்றிபெற்றார்.