![ramadoss](http://image.nakkheeran.in/cdn/farfuture/WXzjoyP6DshhOqweMkVF0DXrqFLkcnxgFBpCp1v3jZ8/1594979828/sites/default/files/inline-images/606_27.jpg)
தமிழ்க்கடவுள் முருகனை இழிவுபடுத்தி மத நம்பிக்கைகளை அவமதிக்கும் ‘கறுப்பர் கூட்டம்’ மீது நடவடிக்கை தேவை என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கறுப்பர் கூட்டம்’ என்ற பெயரில் நடத்தப்படும் யூ-ட்யூப் இணையத் தொலைக்காட்சியில் தமிழ்க் கடவுள் முருகனை புகழ்ந்து பாடப்பட்ட கந்த சஷ்டி கவசம் பாடலின் பொருளையும், நோக்கத்தையும் திரித்து, முருகக் கடவுளையும், அவரது பக்தர்களையும் இழிவு படுத்தும் வகையில் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
கந்த சஷ்டி கவசம் பால தேவராய சுவாமிகளால் கடந்த 16-ஆம் நூற்றாண்டில் ஈரோடு அருகிலுள்ள சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இயற்றப்பட்டதாகும். முருகப்பெருமானை வேண்டினால் மனித உடலின் எந்தப் பாகத்தையும் நோய்கள் தாக்காது என்ற நம்பிக்கையை வலியுறுத்தி இந்தப் பாடல்கள் இயற்றப்பட்டன. இந்தப் பாடல்கள் மீது இந்து மத மக்கள், குறிப்பாக தமிழ்க்கடவுளான முருகப் பெருமானை வழிபடுபவர்கள் மிகுந்த மரியாதை கொண்டுள்ளனர். இறைநம்பிக்கை உள்ளவர்களின் வீடுகளில் இந்தப் பாடல் இசைக்காத நாள் இருக்க முடியாது. அதேபோல், தொலைக்காட்சிகளிலும் காலையிலும், மாலையிலும் இந்தப் பாடல் ஒலிக்கப்படுவதிலிருந்து அதன் சிறப்பை அறிய முடியும்.
ஆனால், இந்தப் பெருமைகள் எதையும் அறியாமல் இந்து மதத்தினரை, குறிப்பாக தமிழ்க் கடவுள் முருகனை வழிபடுவோரின் இறைநம்பிக்கையை அவமதிக்கும் வகையில் கறுப்பர் கூட்டம் யூ-ட்யூப் இணையத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒளிபரப்பட்டிருப்பது திட்டமிடப்பட்ட செயலாகும். இது போன்ற செயல்கள் தமிழகத்தில் நிலவும் மத நல்லிணக்கத்தைச் சிதைக்க வேண்டும்; அதன் மூலம் சட்டம் & ஒழுங்கைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சிலரால் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன. இது தொடர்பாக சிலரைக் காவல்துறையினர் கைது செய்துள்ள போதிலும், இணையத் தொலைக்காட்சியின் பின்னணியில் உள்ள மேலும் பலர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்களையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும். இதற்குத் தூண்டுகோலாக இருந்த அமைப்பைக் கண்டறிந்து, அதன்மீதும், அதை நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
மத நல்லிணக்கத்தையும், இறை நம்பிக்கையையும் அவமதிக்கும் கையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் இணையத் தொலைக்காட்சிகளை சைபர் கிரைம் காவல் பிரிவு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்; அத்தகைய நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்படும் போது, அது குறித்து எவரும் புகார் தருவதற்கு முன்பே சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து நடவடிகை எடுக்க வேண்டும். இணையத் தொலைக்காட்சி சேவை வழங்கும் யூ-ட்யூப் நிறுவனத்திடம் புகார் செய்து இனையத் தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தடை செய்யவும் சைபர் கிரைம் காவல் பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.