கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தல் வரும் மே மாதம் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வியூகங்களை வகுத்து கர்நாடகா மாநில பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய அம்மாநிலத்தின் பிரதான கட்சிகள் மும்முரமாக இயங்கி வருகின்றன. அதே நேரம் கூட்டணி குறித்த பேச்சுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள 189 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக சமீபத்தில் வெளியிட்டது. முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் புதியவர்கள் 52 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் 8 பெண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். தற்போதைய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிகாவன் தொகுதியில் போட்டியிட உள்ளார். தொடர்ந்து அதானி தொகுதியில் தனக்கு வாய்ப்பளிக்க மறுத்ததால் பாஜகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் முன்னாள் துணை முதலமைச்சர் லட்சுமணன் சவுதி ஏற்கனவே அறிவித்திருந்தார். நேற்று முன்தினம் பெங்களூருவில் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோரை சந்தித்த லட்சுமண சவுதி காங்கிரஸில் இணைவதாக அறிவித்திருந்தார்.
லட்சுமண சவுதி அதானி தொகுதியில் 3 முறை நின்று வெற்றி பெற்றவர். கடந்த 2018 ஆம் ஆண்டு அதானி தொகுதியில் லட்சுமண சவுதியை எதிர்த்து போட்டியிட்ட மகேஷ் குமட்டஹள்ளி வெற்றி பெற்றார். தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். இந்நிலையில் இம்முறை மகேஷ் குமட்டஹள்ளிக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு அளிக்கவில்லை. இதனால் லட்சுமண சவுதி காங்கிரஸில் இணைந்தார்.
கர்நாடக பாஜகவின் முக்கியத் தலைவராக இருந்த ஜெகதீஸ் ஷெட்டர் நேற்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் பாஜகவில் இருந்தும் ராஜினாமா செய்து இருந்தார். ஆறு முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ள ஷெட்டர் தனது ராஜினாமா கடிதத்தை சட்டசபை சபாநாயகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரியிடம் கொடுத்திருந்தார். இதற்கு முன்னதாக சனிக்கிழமை இரவு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர்களான பிரகலாத் ஜோஷி, தர்மேந்திர பிரதான் ஆகியோர் ஜெகதீஷ் ஷெட்டரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தலைவர் டி.கே. சிவக்குமார், காங்கிரஸ் மூத்த தலைவர்களான ரன்தீப் சுர்ஜேவாலா, சித்தராமையா ஆகியோர் உடன் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து ஜெகதீஷ் ஷெட்டர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "நான் நேற்று பாஜகவில் இருந்து விலகி இன்று காங்கிரஸ் கட்சியில் சேர்த்துள்ளேன். பாஜகவை சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வரும், கட்சித் தலைவருமான ஒருவர் காங்கிரஸில் இணைந்ததை எண்ணி பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். பாஜக எனக்கு எல்லா பதவிகளையும் கொடுத்துள்ளது. நான் எப்போதும் தொண்டனாக கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்தேன். மூத்த தலைவர் என்பதால் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தேன். ஆனால் கிடைக்கவில்லை என தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். யாரும் என்னிடம் இது குறித்து பேசவில்லை, என்னை சமாதானப்படுத்தவும் முயற்சிக்கவில்லை. நான் என்ன பதவியைப் பெறுவேன் என்று கூட யாரும் உறுதி அளிக்கவில்லை. நான் முழு மனதுடன் காங்கிரசில் இணைகிறேன். டி.கே. சிவக்குமார், சித்தராமையா, ரந்தீப் சுர்ஜேவாலா, எம்பி பாட்டில் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு என்னை அழைத்ததும் நான் மறுபடியும் எது குறித்தும் யோசிக்காமல் இங்கு வந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.