Karnataka Assembly Elections; BJP Minister fled to Tamil Nadu!!

Advertisment

கர்நாடக மாநிலத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி 224 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடக மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக் தனது சொந்த தொகுதியான பத்மநாபநகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளார்.

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே.சிவகுமார் போட்டியிடும் ராம்நகர் மாவட்டம் கனகபுரா தொகுதியிலும் ஆர்.அசோக் போட்டியிடுவார் என பாஜக அறிவித்துள்ளது. இந்நிலையில், அவர் தனது ஆதரவாளர்களுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தரிசனம் செய்தார்.அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச்சந்தித்து பேசும்போது, ஒவ்வொரு முறையும் தேர்தல் சமயத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு எனது முதற்கடவுளான அண்ணாமலையாரை தரிசித்து சென்ற பிறகுதான் வேட்புமனு தாக்கல் செய்வேன் என்றும் அதன் அடிப்படையில் நானும் சக எம்எல்ஏக்களும் அண்ணாமலையாரிடம் தேர்தலில் வெற்றிபெற ஆசீர்வாதம் பெறுவதற்காக சாமி தரிசனம் செய்தோம்.

மத்தியிலும் மாநிலத்திலும் டபுள் எஞ்சின் அரசாக பாஜக அரசு கர்நாடகத்தில் உள்ளதாகவும், மீண்டும் கர்நாடகத்தில் பாஜக அரசு வெற்றி பெற நானும் எனது கட்சியினரும் அண்ணாமலையாரிடம் ஆசீர்வாதம் பெறுவதற்காக இங்கு வந்தோம். கனகபுரா தொகுதியில் நான் போட்டியிடுவது தலைமை எடுத்த முடிவு.தலைமை எடுத்த முடிவு என்பது இறுதி முடிவு. கட்சியைப் பொருத்தவரை நான் சிப்பாய். கட்சித் தலைமை எடுத்த முடிவை நான் மதித்து போட்டியிடுகிறேன்.

Advertisment

தற்பொழுது வருவாய்த்துறை அமைச்சராக நான் இருப்பதால் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக உள்ள டி.கே.சிவக்குமாரை எதிர்த்து நான்போட்டியிடுவதற்காக என்னை கட்சி தலைமை நிறுத்தியுள்ளது. 100% இத்தேர்தலில் நான் வெற்றி பெறுவேன். நான் 6 முறை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன். முதல் முறையாக இரண்டு தொகுதிகளில் நிற்கிறேன். கட்சி தலைமை வழிகாட்டுதலின்படியே தான் போட்டியிடுகிறேன். இந்த தேர்தலில் பாஜக 100 சதவீதம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெறும். கர்நாடக மாநில சாலை வளர்ச்சிக்கும், வேளாண் வளர்ச்சிக்கும், மருத்துவ துறைக்கும் மோடி அரசாங்கம் பல திட்டங்களையும், பல்வேறு வகையில் நிதியுதவிகளையும் செய்துள்ளது.

காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் கர்நாடக மாநிலத்தில் போலி வாக்காளர்கள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளதாக குற்றம் சாட்டியதற்கு பதில் கூறிய அவர்,ஆளும் கட்சியை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது இயற்கை என்றும், இது ஒன்றும் புதிதல்ல.தேர்தல் ஆணையம் பாஜகவோ அல்லது காங்கிரஸோ அல்லது மற்ற கட்சிகளோ கிடையாது அவர்கள் சுதந்திரமானவர்கள்.

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் சுதந்திரமான அமைப்புகள்என்றும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் ஆட்சியில் இருக்கும் பொழுதும் கர்நாடக மாநிலத்தில் பல சோதனைகள் நடைபெற்றது எனவும் இதுபோன்ற சோதனைகள் இயற்கையான செயல் என்றும் தெரிவித்தார்.