Skip to main content

மத்திய கல்வி அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. கடிதம்

Published on 22/02/2023 | Edited on 22/02/2023

 

Kanimozhi MP for Union Education Minister Letter

 

டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து திமுக எம்.பி. கனிமொழி மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் 19.02.2023 அன்று சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர். பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் பயன்படுத்தும் பொதுவான அறையில் இந்நிகழ்ச்சி நடந்ததாகக் கூறப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்த பின்னர் இடதுசாரி அமைப்பினைச் சேர்ந்த மாணவர்கள் சார்பில் ஆவணப்படம் திரையிட இருந்துள்ளனர். 

 

ஆனால், சத்ரபதி சிவாஜி பிறந்தநாள் கொண்டாடும் நிகழ்ச்சி முடிந்த பின்னும் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் அறையை விட்டு வெளியேறாததால் ஆவணப்படத்தை திரையிட வந்த மாணவர்கள் அவர்களை அறையில் இருந்து வெளியேறக் கூறியுள்ளனர். இதன் காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஏபிவிபி அமைப்பினர் அந்த அறையில் இருந்த தலைவர்களின் படங்களை அடித்து உடைத்ததாகவும், இதனைத் தட்டிக்கேட்ட தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர் எனவும் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மாணவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வந்த ஆம்புலன்ஸ் மீதும் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு உண்டானது. மேலும், பெரியார் படத்தை ஏ.பி.வி.பி.யினர் சேதப்படுத்தியதாகவும் தகவல் வெளியானது.

 

இந்தத் தாக்குதல் குறித்து ஏபிவிபி அமைப்பு மாணவர்களிடையே விசாரிக்கும் பொழுது, ஏ.பி.வி.பி அமைப்பினர் மாணவர்களுக்கான பொதுவான அறையில் சத்ரபதி சிவாஜியின் உருவப்படத்தை மாட்டியிருந்ததாகவும் இடதுசாரி அமைப்பினைச் சேர்ந்த மாணவர்கள் இதனைச் சேதப்படுத்தினர் என்றும் இதனையடுத்து தான் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் கூறுகின்றனர். 

 

இந்நிலையில், மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து திமுக எம்.பி. கனிமொழி மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, “டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மாணவர்களைத் தாக்கிய ஏ.பி.வி.பி அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்களைத் தாக்கியதுடன் மார்க்ஸ், பெரியார் படங்களை சேதப்படுத்தியுள்ளனர். காவல்துறையினர் வன்முறையைத் தடுக்கத் தவறியதுடன் பார்வையாளர்கள் போன்று டெல்லி காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்துள்ளனர். பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்