இந்தி மொழி நாளாக செப்டம்பர் 14-ஐ இந்தியாவெங்கும் பாஜக தரப்பு கொண்டாடி வருகிற நிலையில், அதே நாளில் - திமுக முப்பெரும் விழாவைத் தொடங்கி வைத்திருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி.
ஆண்டுதோறும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாளோடு, திமுக தொடங்கிய நாளையும் இணைத்து செப்டம்பர் 15, 16, 17 ஆகிய நாட்களில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டுவருகிறது. அந்த வகையில் இவ்வருடம் திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, இன்று (14.09.2021) தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் ‘திராவிடம் ஒரு வாழ்க்கை முறை’ என்ற காணொளி ஒன்றை வெளியிட்டு முப்பெரும் விழாவைத் தொடங்கி வைத்திருக்கிறார்.
அந்தக் காணொளியின் ஆங்கிலத் தலைப்பு ‘Dravidam is a Lifestyle’ என்று சமூக ஊடகங்களில் பரபரப்பாக டிரெண்டாகி வருகிறது. அந்தக் காணொளியில் "பத்து வருடப் போராட்டத்திற்குப் பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி, நல்லாட்சியாக மலர்ந்திருக்கிறது. இது மக்கள் விருப்பப்பட்டு தேர்ந்தெடுத்த ஆட்சி. பெரியாரின் கனவான, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றியதோடு, அறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சி கொள்கையினை நிலைநிறுத்தும் விதமாக சி.ஏ.ஏ. சட்டத்தை எதிர்த்தும், விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண் சட்டத்தை எதிர்த்தும் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறது. இப்படி ஒரு மாநிலத்தை, மாநிலத்தில் ஆட்சி செய்யும் கட்சிதான் ஆள வேண்டும் என்பதை மறுபடியும் வலியுறுத்தக் கூடிய ஆட்சியாக திமுக ஆட்சி அமைத்திருக்கிறது.
கலைஞரைப் போல எல்லோரையும் ஒன்றாக இணைத்து, எல்லோருக்கும் வாய்ப்புகளையும் உரிமைகளையும் தரக்கூடிய ஆட்சியாகவும், அண்ணன் ஸ்டாலின் நடத்திவருகிறார். இத்தனை ஆண்டுகளக திராவிடம் என்ற உணர்வு, எல்லோருக்கும் சுயமரியாதை இருக்க வேண்டும் என்ற உணர்வை விதைத்திருக்கிறது. அடுத்த தலைமுறைக்கும், இந்தத் திராவிடத்தை எப்படி எடுத்துச் செல்வது என்பது முக்கியம். திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு உணர்வு, இயக்கம் என்பதையெல்லாம் தாண்டி, அது ஒரு வாழ்க்கை முறையாக இருக்கிறது.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், இவர்களெல்லாம், இந்த மண்ணில் விதைத்திருக்கக் கூடிய விருட்சமான திராவிட உணர்வே, என்றும் நம்மைப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறது. அவர்களுடைய கொள்கைகளை, அவர்களுடைய கனவுகளை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதற்குப் பெண்கள், இளைஞர்கள், இந்த சமூகத்திலே யார் யார்க்கெல்லாம் உரிமை மறுக்கப்படுகிறதோ அவர்கள் எல்லாம், ஒன்றிணைந்து தமிழ்நாட்டை வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும். அந்த பாதைக்குப் பெயரே திராவிடம்!” என்று குறிப்பிட்டுள்ளார். கனிமொழியின் இந்த அதிரடி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.