Skip to main content

“என் கட்சிக்காரர்களுக்கு பெரிய வருத்தம் இருக்கிறது” - துரை வைகோவை ஆதரித்து கமல் பிரச்சாரம்

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Kamal campaign in support of Durai Vaiko in trichy

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்த நிலையில், திருச்சி மக்களவைத் தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து திருவரங்கத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்  பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “அரசியல்வாதிகளை விமர்சிக்க வேண்டியது பொதுமக்களின் கடமை. அதனை பொதுமக்கள் செய்துகொண்டே இருந்தால்தான் நாடு நலமுடன் இருக்கும். திராவிட மாடல் நேற்றோ, இன்றோ வந்ததில்லை. திராவிட மாடல் விரைவில் இந்தியாவுக்கான மாடலாக மாறும். திருச்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. நலத்திட்டங்களை செயல்படுத்த போதிய நிதியை மத்திய அரசு தருவதில்லை.

உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களுக்கு அளிக்கும் தொகையை விட தமிழ்நாட்டிற்கு கொடுக்கும் தொகை மிகமிக குறைவு. தமிழ்நாடு கொடுக்கும் ஒரு ரூபாய்க்கு 29 பைசாவை மட்டுமே மத்திய அரசு கொடுக்கிறது. அந்தத் தொகையில் செயல்படுத்தப்படுபவைதான் தமிழ்நாட்டின் திட்டங்கள். அந்த தொகையை அதிகரித்துக்கொடுத்தால் இன்னும் சிறப்பான திட்டங்களை தமிழக மக்களுக்கு செய்ய முடியும். பாஜக ஆட்சி வரும் போது என்ன சொன்னாங்க. சிலிண்டர் வாங்கும்போது பேங்கில் பணம் வரும் என்று சொன்னாங்க, ஆனால் வந்ததா?. சிலிண்டர் விலை இப்போது என்ன? கணக்கு பாருங்க. உலகம் முழுவதும் கச்சா எண்ணெயின் விலை குறைந்த போது லாபத்திற்கு விற்ற அரசு அங்கே அமர்ந்திருந்தது. அதை விமர்சிக்க வேண்டியது நம் கடமை. அதை ஞாபகப்படுத்துவதற்காக தான் நான் இங்கே வந்திருக்கிறேன்.

தம்பி துரை வைகோவுக்காக இங்கே வந்திருக்கிறேன், எனக்காக இல்லை. இதில் என் கட்சிக்காரர்களுக்கு பெரிய வருத்தம் இருக்கிறது. நோ பெய்ன் நோ கெய்ன்.. வலியை தாங்கிக்கொள்ளுங்கள், நாளை நமதே என்று சொல்லியிருக்கிறேன். எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே இருக்கிறது என்பது தான் என்னுடைய கேள்வி? இந்த வடை பசியை ஆற்றாது. ஏனென்றால், இந்த வடை வாயினால் சுட்ட வடை, அது நோயாகத்தான் முடியும். இதையெல்லாம் நியாபகப்படுத்தி சொல்ல இங்கே வந்திருக்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்தியாவுக்கும், எனக்கும் உள்ள காதல் சாதாரணமானது இல்லை. இது சாதாரண காதல் அல்ல. அதையும் தாண்டி ரொம்ப புனிதமானது. எனக்கு மனிதன் தான் மதம். அரசியலில் மதம் கலந்த எந்த நாடும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை.

அரசியலை விமர்சிக்க வேண்டியது நமது கடமை. சீட்டுக்காக வரவில்லை, நாட்டுக்காகவே வந்திருக்கிறேன். திராவிட மாடலை பின்பற்றினால் இந்தியாவின் நுழைவுவாயிலாக தமிழ்நாடு இருந்திருக்கும். திராவிட மாடல் என்பது ஒரு சித்தாந்தம். தமிழ்நாட்டில் செயல்படுத்தும் திட்டங்களை, இந்தியா முழுவதும் செயல்படுத்தினால், உலகே இந்தியாவை திரும்பிப் பார்க்கும். மகளிர் உரிமைத்தொகை, மகளிர் இலவச பேருந்து பயணம், இவையெல்லாம் இந்தியா முழுவதும் வரவேண்டும்.

தேசபக்தி என்பது பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டியது. தேசம் என்பது பாரபட்சம் இல்லாமல், அனைத்து மொழிகளையும் பாரபட்சமில்லாமல் பேசி மகிழ்ந்திருப்பது. இந்தியாவில் மதக்கலவரங்கள் இல்லாத மாநிலம் என்றால், அது தமிழகம் மட்டும் தான். இதுவே ஒரு நல்ல அரசு, நல்ல நிர்வாகம், நல்ல அரசியல் நடைபெறுகிறது என்பதற்கான அடையாளம். 1920 இல் ஜஸ்டிஸ் கட்சியால் தொடங்கப்பட்டது தான் இந்த மதிய உணவுத் திட்டம். அந்த கட்சி ஆட்சியில் இல்லாததால் அந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை. ஆனால் அதை கவனித்துப் பார்த்த காமராஜர், அந்தத் திட்டத்தை செயல்படுத்தினார். அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர், அதைத் தொடர்ந்து இந்த திட்டம் தொடர்ந்து முன்னோக்கி சென்றாலும் நம்முடைய முதல்வர் அதோடு காலை உணவுத் திட்டத்தையும் சேர்த்து வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் செயல்படுத்தக்கூடிய மகளிர் உரிமைத் திட்டம், பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்திட்டம் போன்றவற்றை இந்திய அளவில் நாம் செயல்படுத்தியதால் எத்தனையோ பல கோடி பெண்கள் பயனடைந்தார்கள். இந்த மகளிருக்கான உரிமை தொகை திட்டம் என்பது மக்கள் நீதி மையத்தினுடைய திட்டங்களில் ஒன்று. ஆனால், அதை கிண்டல் அடிக்காமல் நம்முடைய முதல்வர் அப்படியே நிறைவேற்றி இருக்கிறார். எனவே, அதற்காகவே இன்று நான் இங்கு வந்து நிற்கிறேன்.

பல நேரங்களில் ஒன்றிய அரசு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என்ற அமைப்புகளை வேட்டை நாயை போல பயன்படுத்துகிறது. நான் ஒழுங்காக வரி கட்டுகிறவன். இதுவரை அவர்கள் எனக்காக வேலை பார்த்தார்கள். ஆனால் இன்று, அவர்களுக்கு வீட்டு வேட்டை நாய்களாக மாறிவிட்டார்கள். அதேபோல் முதல்வர்களை கைது செய்து விட்டோம் என்று பாஜக நினைக்கிறது. ஆனால், அந்த முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வர் வாக்காளர்களும், பொதுமக்களும் ஆகிய நீங்கள் தான். அப்படி என்றால் அவர்கள் 100 கோடி மக்களை எதிர்க்கிறார்கள், கைது செய்ய துடிக்கிறார்கள் என்று தான் அர்த்தம்” என்று பேசினார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

சாட்டை துரைமுருகன் விடுவிப்பு!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
ntk sattai Duraimurugn Release 

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல் நலக்குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர்.

இதனையொட்டி தேர்தலுக்கான பரப்புரை கடந்த 8 ஆம் தேதி (08.07.2024) மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அதனைத் தொடர்ந்து தேர்தலுக்கான பரப்புரை கடந்த 8 ஆம் தேதி (08.07.2024) மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதற்கிடையில் நேற்று (10.07.2024) காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. இதற்கிடையே விக்கிரவாண்டி தேர்தல் பரப்புரையின் போது தமிழக அரசு மற்றும் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் மீது திமுகவின் தொழில்நுட்ப பிரிவு (ஐடி விங்) சார்பில் திருச்சி சைபர் கிரைம் போலீல் புகார் அளிக்கப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பாக சாட்டை திருமுருகன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து நெல்லை வீராணம் பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த சாட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் இன்று (11.07.2024) கைது செய்தனர். பின்னர் சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இரு தரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து சாட்டை துரைமுருகனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அனுப்ப நீதிபதி சுவாமிநாதன் மறுத்து சாட்டை துரை முருகனை விடுவித்து உத்தரவிட்டார். விடுவிக்கப்பட்ட சாட்டை துரைமுருகன், “இந்த வழக்கை ரத்து செய்ய நீதிமன்றத்தை நாடுவேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

புதுக்கோட்டையில் ரவுடி சுட்டுக் கொலை!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Trichy MGR nagar Durai incident at Pudukottai

திருச்சி மாவட்டம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் துரை. ரவுடியான இவர் மீது 70க்கும் மேற்பட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லக்கூடிய வம்பன் காட்டுப்பகுதியில் துரை பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்ய சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அப்போது துரை தான் வைத்திருந்த ஆயுதங்களால் போலீசாரை தாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்ததுடன் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.

இதனால் போலீசார் தற்காப்புக்காக இவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனையடுத்து இவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என் கவுண்டர் நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு திருச்சியில் ஏற்கனவே திருட்டு வழக்கிற்காக இவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது தப்பிச் சென்றவர் ஆவார். மேலும் காவல் ஆய்வாளார் உள்ளிட்ட 5 காவலர்கள் துரை தாக்கியதில் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.