நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22ஆம் தேதி முதல் இரு அவைகளிலும் நடைபெற்று வருகிறது. மத்திய நிதியமைச்சர் மக்களவையில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மக்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, இந்திய மருத்துவ சர்வீஸ் உருவாக்கி மருத்துவர்களை அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் எனக் கூறினார்.
இது குறித்து அவர் பேசியதாவது, “நமது நாட்டில் ஒன்றிய பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ், ஐ.ஆர்.எஸ்.ஐ, இரயில்வே சர்வீஸ் என இருபதுக்கும் மேற்பட்ட துறைகளுக்கு அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதுபோல மக்களுக்கு மிக முக்கிய துறையாக உள்ள மருத்துவத்துறைக்கு என்று இந்தியன் மெடிக்கல் சர்வீஸ் என்று ஒரு பிரிவை உருவாக்கி எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் போன்ற மருத்துவக் கல்வி பயின்றவர்களைத் தேர்ந்தெடுத்து மருத்துவத்துறை அதிகாரிகளாக நியமனம் செய்ய வேண்டுமென்று பல ஆண்டுகளாக மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் கோரி வருகின்றனர்.
மருத்துவம் தவிர்த்து வேறு கல்வி பயின்ற அதிகாரிகளை மருத்துவத்துறை அதிகாரிகளாக நியமிக்கும் போது அவர்களுக்கு மருத்துவம் சம்பந்தப்பட்ட விவரங்கள் குறித்த புரிதல் இல்லை. எனவே அவர்கள் மேற்கத்திய நாடுகள் பின்பற்றுகின்ற மருத்துவ அளவீடுகளையே உதாரணத்திற்கு சர்க்கரை வியாதி முதலானவற்றுக்கே மேற்கத்திய நாடுகளின் அளவீடுகளையே பின்பற்றுகின்றனர். குளிர் தேசங்களான மேற்கத்திய நாடுகள் வைட்டமின் D குறித்து வைத்துள்ள அளவீடுகளையே வெப்ப நாடான நம் நாட்டிற்கும் பின்பற்றுகின்றனர். மருத்துவத்துறைக்கு குறிப்பிட்ட சதவிகிதம் நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்ட போதிலும் கூட இத்துறைக்கு பட்ஜெட்டில் 2 சதவீத அளவிற்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இது போன்ற பிரச்சனைகளை புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் அதிகாரிகள் இருந்தால் தான் இக்குறைகள் நிவர்த்தி செய்யப்படும். எனவே, இந்திய மருத்துவத்துறை என்று ஒரு பிரிவை உருவாக்கி மருத்துவக் கல்வி பயின்றவர்களைத் தேர்ந்தெடுத்து மருத்துவத்துறைக்கு அதிகாரிகளாக நியமனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்” எனப் பேசினார்.