அதிமுகவின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி, இன்று அதிகாலை தமிழக காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டதற்குப் பிறகும், அவர் நடத்தும் சமூக வலைதளங்களில் அதிமுக கட்சி பெயரையும் இரட்டை இலை சின்னத்தையும் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும், இன்னும் அதிமுகவில் அவர் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி வருவதாகவும் அவர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு. இதன் அடிப்படையில் வந்த புகாரை தொடர்ந்து கோவை மாவட்ட சூலூர் பொலீசார் அவரை கைது செய்திருக்கின்றனர்.
கே.சி.பழனிசாமி எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதி. 40 ஆண்டு காலமாக அதிமுகவில் இருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தர்மயுத்தம் நடத்திய துணை முதல்வர் ஓபிஎஸ் ஆதராவளராக இருந்தார். ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைந்த பிறகும் அவரது ஆதரவாளராகவே செயல்பட்டார் கே.சி.பழனிச்சாமி.

ஜெயலலிதாவின் மறைவையொட்டி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் சசிகலா. இவரது நியமனம் செல்லாது என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார் கே.சி.பழனிசாமி. இதற்கு பதில் அளிக்குமாறு சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது ஆணையம். அவர் பதில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும் கடந்த 3 வருடங்களாக அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. இதற்கிடையே, சசிகலா நியமனத்துக்கு எதிராகவும் இந்த விவகாரத்தில் தகுந்த முடிவை ஆணையம் எடுக்க வலியுறுத்தியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கே.சி.பழனிச்சாமி. அந்த வழக்கு விசாரணையில் இருக்கிறது.
இந்த சூழலில், கடந்த 2018-ல் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக விவாகரம் தேசிய அளவில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய பாஜக அரசு நியாயமான நடவடிக்கையை எடுக்காது போனால் பாஜக அரசுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக எம்.பி.க்கள் ஆதரிப்பார்கள் என்கிற ரீதியில், தொலைக்காட்சி விவாதங்களில் பதிவு செய்தார் கே.சி.பழனிசாமி. பாஜகவை நேரடியாக மிரட்டுவதாக இருப்பதாக அவர் மீது எழுந்த புகாரில் கே.சி.பி.யை எடப்பாடி பழனிச்சாமியும், ஓபிஎஸ்சும் இணைந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினர்.
ஆனால், தனது நீக்கம் செல்லாது என தெரிவித்த கே.சி.பி., ‘’ அதிமுக சட்ட விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளரால் மட்டுமே கட்சி உறுப்பினர்களை நீக்க முடியும். ஆனால், சட்டவிதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் அதிமுகவில் இல்லை என்பதால் முதல்வரும் துணை முதல்வரும் என்னை நீக்குவதற்கு அதிகாரமற்றவர்கள். அதனால் என்னை நீக்கியது செல்லாது ‘’ என போர்க்கொடி உயர்த்தினார். இந்த விவகாரம் இப்போதும் அதிமுகவில் அலையடித்துக் கொண்டுதானிருக்கிறது.
இதற்கிடையே, தேர்தல் ஆணையத்திலும் டெல்லி உயர்நீதிமன்றத்திலும் சசிகலா நியமனத்துக்கு எதிரான வழக்குகளில் சீரியஸ் காட்டி வந்தார் கே.சி.பழனிச்சாமி. சசிகலாவுக்கு எதிரான அரசியலை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். மேலும், அதிமுக கட்சியின் சட்டவிதிகளில் திருத்தம் செய்து, பொதுச்செயலாளர் பதவியை ஒழித்துவிட்டு, அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் என பதவியை உருவாக்கினர் எடப்பாடி பழனிச்சாமியும் ஓபிஎஸ்சும். அதிமுக பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்ட இந்த சட்டத்திருத்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியது அதிமுக தலைமை.
ஆனால், இந்த சட்ட திருத்தம் செல்லாது என்றும், இதற்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்றும் மீண்டும் ஒரு வழக்கை ஆணையத்தில் தாக்கல் செய்தார் கே.சி.பழனிச்சாமி. இந்த புகாரும் நிலுவையில் இருக்கிறது. இந்த சூழலில், டெல்லியிலுள்ள மூத்த வழக்கறிஞர்கள், ‘’ ஆணையத்திலும் டெல்லி உயர் நீதிமன்றத்திலும் கே.சி.பழனிசாமி போட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வையுங்கள். இல்லையெனில், எதிர்காலத்தில் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் ‘’ என எடப்பாடி பழனிச்சாமிக்கு தகவல் தந்தனர்.
இதனை அடுத்து, தலைமைச்செயலகத்துக்கு கே.சி.பி.யை எடப்பாடியும் ஓபிஎஸ்சும் வரவழைத்தனர். அந்த சந்திப்பின்போது, ’’வழக்குகளை வாபஸ் பெறுங்கள். கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை நாங்களும் வாபஸ் பெறுகிறோம்’’ என கே.சி.பி.க்கு அழுத்தம் தந்தனர். ஆனால், வழக்குகள் வாபஸ் பெறுவதில் அவசரம் காட்ட முடியாது என மறுத்து விட்டு வந்தவர், ’’அதிமுகவில் மீண்டும் என்னை இணைத்துக்கொள்வதாக முதல்வர் தெரிவித்திருக்கிறார்’’ என சொல்ல, அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, அவரை கட்சியில் சேர்த்துக்கொண்டதாக எந்த தகவலையும் நாங்கள் சொல்லவில்லை என அதிமுகவிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனால் கோபம் அடைந்த கே.சி.பழனிச்சாமி, சசிகலா நியமனம், அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் உள்ளிட்டவைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விரைந்து விசாரணைக்கு வருவதில் தீவிரம் கவணம் செலுத்தி வந்தார். டெல்லி உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, பிப்ரவரி 6-ந்தேதி வருகிறது. இந்த சூழலில்தான் கடந்த ஒரு வாரமாக,’ வழக்குகளை வாபஸ் வாங்குங்கள் ’ என தொடர்ந்து அவருக்கு மிரட்டலும் அழுத்தமும் கொடுக்கப்பட்டது. ஆனால், வாபஸ் பெற அவர் மறுத்துள்ளார். இந்த சூழலில்தான், கைது நடவடிக்கை அவர் மீது பாய்ந்துள்ளது ‘’ என்கிறார்கள் கே.சி.பி.க்கு ஆதரவான அதிமுகவினர்.