மோடி சமுதாயத்தை இழிவுபடுத்திவிட்டதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அதே நேரம் பாஜக தரப்பினர் இதற்கும் மத்திய அரசிற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்புச் சட்டை மற்றும் பதாகைகளுடன் வருகை தந்தனர். காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை அலுவலகத்தின் நுழைவு வாயில் கேட் எண் 4 அருகே கருப்புச் சட்டை அணிந்தவாறு ராகுல் காந்திக்கு ஆதரவான பதாகைகளை ஏந்தி வந்திருந்தனர். காங்கிரசில் மொத்தம் 18 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் நிலையில் ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரை தவிர்த்து 17 எம்.எல்.ஏ.க்கள் இதில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, “23 ஆம் தேதி சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நாடே அறியும். அதானி பற்றி பேசிய 24 நாட்களுக்குள் தடை ஆணை வாங்கிய வழக்கை நடத்தி 24 மணி நேரத்திற்குள் 2 வருட சிறை தண்டனை என்று எங்கும் காணாத அளவிற்கு தீர்ப்பை கொடுத்துள்ளார்கள். இப்படிப்பட்ட சர்வாதிகாரம் ஹிட்லர் முசோலினி ஆட்சிக்காலத்தில் கூட நடக்கவில்லை. மோடி ஆட்சியில் பார்க்கமுடிகிறது.
தொடர்ந்து போராடுவோம். இன்று கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பை தெரிவித்துள்ளோம். பதாகைகளுடன் சட்டப்பேரவைக்கு வந்துள்ளோம். சட்டமன்றத்தில் கண்டன தீர்மானம் போடுவதற்கு அனுமதி கோரியுள்ளோம். இன்று இரவு உள்ளிருப்பு போராட்டத்தை செய்யப்போகிறோம். இது முழுக்க முழுக்க மத்திய அரசுக்கு எதிரான போராட்டம். மோடிக்கு எதிரான போராட்டம்.
காந்திக்கும் பாஜகவிற்கும் என்ன சம்பந்தம் உள்ளது. பாஜகவும் ஆர்.எஸ்.எஸும் கோட்சேவை இந்த நாட்டின் பிதாமகன் என சொல்கிறார்கள். இவர்களுக்கு மகாத்மா காந்தியைப் பற்றி பேச என்ன தகுதி உள்ளது” எனக் கூறினார்.