பீகார் மாநில முன்னாள் முதல்வரும், இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா என்ற கட்சியின் தலைவருமான ஜித்தன் ராம் மாஞ்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
பீகார் மாநில முதல்வராக இருந்த ஜித்தன் ராம் மாஞ்சி, தற்போதைய முதல்வர் நிதீஷ்குமாரால் பதவிநீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா என்ற கட்சியைத் தொடங்கினார்.
2015ஆம் ஆண்டு பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியோடு இணைந்து தேர்தலைச் சந்தித்தார். அவரது கட்சிக்கு 21 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், ஒரேயொரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது.
ஜெகன்னாபாத் தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் மாஞ்சி தன் மகனை போட்டியிட அனுமதிக்கவேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், பா.ஜ.க. தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் சார்பிலான ஆபிரகாம் சர்மாவை நிறுத்தவேண்டும் கூறியிருந்தது.
மாஞ்சி தனது மகனை ஜெகன்னாபாத் தொகுதியில் போட்டியிட வைப்பதன் மூலம், அவரது அரசியல் எதிர்காலத்தை பலப்படுத்த எண்ணியிருந்தார். அது நடக்காத காரணத்தால் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை லல்லு பிரசாத் யாதவ் வீட்டில் வைத்து மாஞ்சி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்தாலோசனையில் ஈடுபட்டனர். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தேஜஸ்வி, ‘மாஞ்சி எனது காப்பாளரைப் போன்றவர். ராஷ்திரிய ஜனதா தளம் கட்சியின் மெகா கூட்டணியில் அவருக்கான உரிய மரியாத வழங்கப்படும்’ என தெரிவித்தார்.
பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் காவ்கப் குதாரி, ‘இது மகிழ்ச்சியான தருணம். மாஞ்சி தாமதமாக எங்கள் மெகா கூட்டணிக்கு அவரை வரவேற்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறும் அவரது முடிவு மிக தாமதமானது என்றாலும், அது சிறந்த முடிவு. அவருக்கு உரிய மரியாதை வழங்குவோ’ என தெரிவித்திருக்கிறார்.