கடந்த 1938 ஆண்டு நடந்த மொழிப்போரில், இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி சிறைச்சென்று தியாகிகள் நடராசன், தாளமுத்து உள்ளிட்ட பலரும் பலியாகினர். இவர்களது நினைவை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் நினைவு அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இன்று (25-01-25) உள்ள மொழிப்போர் தியாகிகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இந்தி திணிப்பை எந்த காலத்திலும் தமிழன் ஏற்க மாட்டான். தமிழகத்தில் காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதால் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. காவல்துறை சரியாக செயல்பட்டால் குற்றங்கள் நடக்காது. பெரியார் ஒரு சகாப்தம். இன்று இருப்பவர்களை பற்றி அடுத்த 50 வருடத்திற்கு பிறகு யாராவது பேசுவார்களா?. யாரும் பேச மாட்டார்கள். ஆனால், பெரியாரை இந்த உலகம் உள்ளவரை பேசும்.
1921இல் பெரியார் இல்லையென்றால்இன்றைக்கு இருக்கும் சமூக நீதி, ரிசர்வேஷன் சிஸ்டம் எல்லாம் கிடைத்திருக்குமா? யாரும் படித்திருக்க முடியாது, பெரிய அளவில் அந்தஸ்து கிடைத்திருகாது. பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் இவர்களெல்லாம் சமூக அளவிலும், கல்வி அளவிலும் பொருளாதார அளவிலும் இன்றைக்கு சமுதாயத்தில் முன்னுக்கு வந்திருக்கிறார்கள். இப்படி இருக்கும் போது பெரியாரை கொச்சைப்படுத்தி தாங்கள் வளர வேண்டும் என்று நினைத்தால் நிச்சயமாக அது அழிவு பாதைக்கு தான் கொண்டு செல்லும்” என்று கூறினார்.
இதையடுத்து, பெண் பத்திரிகையாளரிடம் சீமான் கூறிய சர்ச்சைக்குரிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “பத்திரிகை துறையை கையாளுவது ஆற்றல் மிக்க செயலாகும். அதற்கு சகிப்பு தன்மை வேண்டும். அந்த சகிப்பு தன்மை இருப்பவர்களுக்கு மட்டும் தான் அரசியலில் ஒரு அங்கீகாரம் கிடைக்கும். சகிப்பு தன்மை இல்லையென்றால் அங்கீகாரம் கிடைக்காது. பத்திரிகையாள கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு போகவேண்டியது தானே. இப்போது நீங்கள் எதை பற்றி வேண்டுமானாலும் கேள்வி கேளுங்கள், நான் பதில் சொல்றேன். ஐ ஆம் ரெடி, ஏனென்றால் என்கிட்ட சரக்கு இருக்கு. நான் ஓடமாட்டேன். நான்காவது தூணாக இருக்கக்கூடிய பத்திரிகை துறை அவமானப்படுத்துவது, ஜனநாயகத்திற்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம் ஆகும். அரசியல்வாதி என்றால் ஒரு பக்குவம் வேண்டும். எனக்கு கோபம் வராதா? ஆனால் அது தேவையில்லாதது” என்று கூறினார்.