Skip to main content

“இப்போ கூட காளைய கூட்டிட்டு வாங்க...அடக்கி காட்டுறேன்” - ஜெயக்குமார்

Published on 17/01/2024 | Edited on 17/01/2024
Jayakumar Fun and challenging on jallikkattu

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று (17-01-24) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு அதிமுக கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஏராளமான நிகழ்வுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். 

அந்த வகையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உடன் இருந்தனர். 

அதனை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், துக்ளக் நிகழ்ச்சியில் பேசிய குருமூர்த்தி, ரஜினிகாந்த் அண்ணாமலையை முதலமைச்சராக ஆக்க வேண்டும் என்று விரும்பியதாக தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இது ஒரு அறையில் பேசிய விஷயம். ரஜினிகாந்த் சபையில் தெரிவிக்கட்டும், நான் பதில் சொல்கிறேன். அண்ணாமலை தமிழகத்தில் முதலமைச்சராவது எழவு காத்த கிளி போலத் தான்” என்று கூறினார். 

மேலும் பேசிய அவர், “தமிழர்களின் அடையாளமாக இரண்டு விஷயம் இருக்கிறது. ஒன்று வீரம், மற்றொன்று காதல். அதை மாற்ற முடியாது. வீரம் இல்லாதவர் தமிழர் கிடையாது. அதே போல், காதல் இல்லாதவர் தமிழர் கிடையாது. எனவே, வீரத்தின் சின்னம் தான் ஜல்லிக்கட்டு விளையாட்டு. இப்போ கூட காளை மாட்டை கூட்டிட்டு வாங்க, நான் அடக்கி காட்டுறேன். அரசியலில் எத்தனையோ ஓடாத மாடுகள் இருக்கிறது. அதனிடம் நான் மோதுவதில்லை” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

உற்சாகத்தில் ராயபுரம் மனோ.. என்ன நடக்கிறது களத்தில்! வட சென்னை யார் வசம்?

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
What is happening in the Royapuram Who owns North Chennai

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அனைத்துக் கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். வடசென்னை தொகுதியில் அ.தி.மு.க. வாக்குகளைச் சேகரிப்பதோடு, குறைவான வாக்குகளைப் பெறக்கூடிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்களாம். இத்தொகுதியில், ராயபுரம், திரு.வி.க. நகருக்கு ஜெயக்குமாரும், ஆர்.கே. நகர், பெரம்பூருக்கு ராஜேஷும், திருவொற்றியூருக்கு மாதவரம் மூர்த்தியும், கொளத்தூருக்கு வெங்கடேஷ் பாபுவும் தேர்தல் பொறுப்பாளர்களாகப் பணிகளைப் பார்க்கிறார்கள். திரு.வி.க. நகர் பகுதிக்கு கூடுதல் தேர்தல் பொறுப்பாளராக சீனிவாசனை நியமித்துள்ளார்களாம்.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் அ.தி.மு.க.வுக்கென இருக்கும் நிரந்தர வாக்குகளோடு, சிறுபான்மையினரின் வாக்குகளையும், இளைஞர்களின் வாக்குகளையும் பெறுவதற்கான திட்டங்களை வகுத்துள்ளனராம். கடந்த முறை பா.ஜ.க. கூட்டணி காரணமாகக் கிடைக்காத சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவர்வதற்காக, அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்குமிடையே எந்தவிதத் தொடர்பும் இல்லையென்பதை எடுத்துரைத்து வாக்குகளைத் திரட்டுகிறாராம் ராஜேஷ். அதேபோல் திருவொற்றியூர் மணலி ஆயில் பிரச்சனைக்கு இதுவரை எவ்விதத் தீர்வும் எட்டப்படாததைக் கூறியும் மக்களைத் திரட்டுகிறாராம்.

கொளத்தூரில் மட்டும் தி.மு.க. பலம்வாய்ந்ததாக இருப்பதால் ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளில் அ,தி.மு.க.வுக்கான வாக்கு சதவீதத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது அ.தி.மு.க. தலைமை. ஆனால், திரு.வி.க. நகர் பகுதிக்கான பொறுப்பாளரான ஜெயகுமாரோ, தென் சென்னையில் போட்டியிடும் வாரிசுக்கு நிலவரம் கலவரமாக இருப்பதால், வடசென்னையில் ஈடுபாடில்லாமல் செயல்படுகிறாராம். வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்கள் வசிக்கும் திரு.வி.க. நகர் பகுதியில், அவர்களின் வாக்குகளைக் கவர்வது குறித்து ஆர்வமின்றி இருக்கிறாராம். ஏற்கெனவே பூத் கமிட்டிக்காக 5 கட்டமாக ஒதுக்கப்பட்ட நிதியில், தற்போதுதான் முதற்கட்ட நிதியையே ரிலீஸ் செய்துள்ளாராம். இதுபோன்ற உள்ளடிகளைப் புரிந்துகொண்டு தான் தலைமையே திரு.வி.க.நகருக்கு சீனிவாசனை கூடுதலாக பொறுப்பாளராக்கியது. சீனிவாசனையும் முதலில் செயல்படவிடாமல்,  ‘நீ பேப்பர் ஒர்க்கை மட்டும் பார்த்துக்கொள்’ எனக்கூறி அவரைத் தடுத்திருக்கிறார் ஜெயக்குமார். இதுகுறித்தும் தலைமைக்கு செய்தி போக, தற்போது சீனிவாசனும் தீவிரமாக களப்பணியில் இறங்கியுள்ளார்.

What is happening in the Royapuram Who owns North Chennai

இப்படி சின்னச்சின்ன பிரச்சனைகளைச் சரிசெய்த பின்னர், வடசென்னையில் வெற்றிபெறும் இலக்கோடு உற்சாகத்தோடு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் ராயபுரம் மனோ. தொகுதியிலிருக்கும் எளிய உழைப்பாளிகளான இளநீர் விற்பவர்கள், துணி தைப்பவர்கள், ஹோட்டலில் தோசை சுடும் மாஸ்டர் என ஒவ்வொருவரின் பணிகளிலும் தானும் ஈடுபட்டு, அவர்களின் மனதைக் கவர்வதோடு வாக்குகளையும் கவர்ந்தபடி தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டிவருகிறார்.

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.