Skip to main content

ஓபிஎஸ் அதிமுக இணைப்பு? - மாஜி அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

Published on 08/02/2023 | Edited on 08/02/2023

 

Jayakumar explains about OPS AIADMK merger

 

ஈரோடு இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதேநேரம் அதிமுக சார்பில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவரும் தனித்தனி வேட்பாளரை களமிறக்கினர். ஆனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்பதால் ஓ.பி.எஸ் அணி சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர் வாபஸ் பெறப்பட்டு, இ.பி.எஸ் நிறுத்திய வேட்பாளர் அதிமுக சார்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என உறுதி செய்யப்பட்டது. ஆனால் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்வோம்., ஆனால் இ.பி.எஸ் நிறுத்திய வேட்பாளர் தென்னரசு பெயரை சொல்லி வாக்கு சேகரிக்கமாட்டோம் என ஓ.பி.எஸ் அணியின் கு.பா.கிருஷ்ணன் தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அரசு இயந்திரத்தை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பயன்படுத்தி அதன்மூலம் குறுக்கு வழியில் வெற்றி பெறும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது. திமுக அமைச்சர்கள் அங்கு முகாமிட்டு இருந்தாலும், ஒட்டு மொத்த திமுக காரர்களையும் ஈரோடு கிழக்கில் குவித்து வைத்திருந்தாலும் மகத்தான வெற்றி இரட்டை இலைக்கு கிடைக்கும். 

 

ஓபிஎஸ் இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்தினார். இப்பொழுது திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். கசாப்புக் கடைக்காரனை ஆடுகள் நம்பினால் ஆடுகளுக்கு என்ன கதி ஆகும். அந்த கதி தான் ஓபிஎஸ் வேட்பாளருக்கும் ஆகியுள்ளது. இரட்டை இலை முடக்கப்படக் கூடாது என்பதற்காக வாபஸ் பெற்றதாக சொல்கிறார். குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறுகிறார்கள். ஓபிஎஸ் இபிஎஸ் சந்திப்பிற்கு வாய்ப்பு இருக்கிறதா என கேட்கிறார்கள். அது எப்படி சந்திக்க முடியும். அதற்கு வாய்ப்புகள் என்பது 100% இல்லை. இது இடைக்கால மனு, இபிஎஸ் தாக்கல் செய்து இரட்டை இலையை நாம் பெற்றுள்ளோம். 

 

ஓபிஎஸ்-ஐ பொறுத்தவரை முழுக்க முழுக்க திமுகவின் பி-டீம் ஆக செயல்பட்டு இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைத்தார். தற்போது அது முடியாது என்ற காரணத்தால் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார். இரட்டை இலை சின்னத்தை பெற்றதில் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்க போகிறோம் என சொல்கிறார். தென்னரசு என சொல்லுவதற்கு வாய் வலிக்கிறதா? வேட்பாளரை திரும்ப பெற்றதற்கு செங்கோட்டையன் ஓபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் தரப்பு கு.பா.கிருஷ்ணன் மாப்பிள்ளைக்கு நன்றி என தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் தனிப்பட்ட முறையில் சொல்லி இருக்கலாம். நான் சொன்னது கட்சி ரீதியாக இணைப்பு சாத்தியமில்லை

 

மீண்டும் சமாதான முயற்சியில் ஓபிஎஸ் ஈடுபடுவார் என ஓபிஎஸ் தரப்பில் சொல்கிறார்கள். அது எப்படி முடியும். அவர்களது செயல்பாடு திமுகவை சார்ந்து உள்ளது. ஓபிஎஸ் அதிமுக சமாதானம் நடக்காது” என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று  வருகிறது. இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டி கொடுத்திருக்கிறோம். கட்டி 3 வருடம் ஆகிறது. 1200 கோடியில் கட்டிக் கொடுத்திருக்கிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா என பல கட்டிடங்களை கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் ஒற்றைச் செங்கலை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக போகிறீர்களே உதயநிதி ஸ்டாலின் பல லட்சம் செங்கலில் கட்டி இருக்கிறோம் ஏன் அதை திறக்க மாட்டேன் என்கிறீர்கள்.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடம் என்று இன்றுவரை ரிப்பன் வெட்டுவதற்கு உங்களால் முடியவில்லை. மூன்று வருடம் ஆகிறது. இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது. என்ன கொடுமை பாருங்கள் நிறைவேற திட்டத்தை செங்கல்லை தூக்கிக்கொண்டு விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் கட்டிமுடித்த திட்டத்தை திறக்க முடியாத ஒரே அரசு திமுக அரசு. இந்த திட்டம் கொண்டுவரக் கூடாது என்று பார்க்கிறார்கள்.

இது ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டம். கால்நடை பூங்கா திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம். அமெரிக்கா செல்லும் பொழுது அங்கு ஒரு பால் பண்ணைக்கு சென்றேன். அங்கு ஒரு பசு ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் கறக்கிறது. அந்த பசு போல நம்முடைய மாநில சீதோசன நிலைக்குத் தக்கவாறு கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகள் கொடுக்க வேண்டும். 40 லிட்டர் பாலை ஒரு நாளைக்கு கறந்து அவர்கள் வருமான பெருக வேண்டும் என்பதற்காக இந்த அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தேன். அதில் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் உள்ளது . அதன் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு கிடைக்கும் கால்நடைகளை விவசாயிகளுக்கு கொடுத்து இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் குறிக்கோள். இன்று நாம் ஒரு ஆடு வளர்த்தால் 20 கிலோ தான் கிடைக்கும். ஆனால் கலப்பின ஆடு வளர்த்தால் 40 கிலோ கிடைக்கும். இந்த திட்டத்தை முடக்கி வைத்த அரசாங்கம் திமுக அரசாங்கம். கால்நடை பூங்கா வந்திருந்தால் இந்தப் பகுதி பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும். உலக அளவில் நம்முடைய சேலம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பிரசித்தி பெற்றிருக்கும்'' என்றார்.

Next Story

வடசென்னை தொகுதியில் வேட்பாளரை ஆதரித்து அதிமுகவினர் பைக் பிரச்சாரம்!(படங்கள்)

Published on 13/04/2024 | Edited on 13/04/2024

 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், மாநில தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை அனைவரும் தமிழ்நாட்டைச் சுற்றி சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வடசென்னை அதிமுக வேட்பாளர் மனோவை ஆதரித்து அக்கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று, வடசென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.நகரில்  திமுகவின் மூன்றாண்டு கால ஆட்சியில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை வாக்காளர்களுக்கு உணர்த்தும் வகையில் தேர்தல் பொறுப்பாளரும் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளருமான ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் 600 பெண்கள் கருப்பு புடவை அணிந்து  ஜெயலலிதாவின் முகம் பதித்த போட்டோவை முகத்தில் அணிந்தபடி பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது, விலைவாசி உயர்வைப் பட்டியலிட்ட பதாகைகளுடன் அரிசி, பருப்பு, பூண்டு உள்ளிட்ட மளிகை பொருட்களை கழுத்தில் மாலையாக தொங்கவிட்டபடி இ.பி.எஸ் போட்டோ ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இருசக்கர வாகனங்களில்  இரு பெண்கள் அமர்ந்து கையில் அ.தி.மு.க. கட்சி நிறம் கொண்ட பலூன்களுடன் பேரணியாக  வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து தொகுதி முழுக்க தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. 

பேரணி  ஊர்வலமானது 47 - வது வட்டம் கொருக்குப்பேட்டை சி.பி.ரோடு ஹரிநாராயணபுரத்தில் தொடங்கப்பட்டு, கிளாஸ் பாக்டரி,  கே.எச்.சாலை இ.எச்.ரோடு வைத்தியநாதன் மேம்பாலம், இளைய முதலிதெரு, வ.உ.சி நகர் மெயின் ரோடு, மார்கெட் தெரு, சேனியம்மன் கோவில் தெரு, ஜீவாநகர், எல்.ஐ.ஜி.காலனி, ஏ.இ.கோவில் தெரு, தியாகி பெருமாள் தெரு, டி எச் ரோடு, வீரராகவன் தெரு, எஸ்.என்.செட்டி தெரு, ஜீவரத்தினம் சாலை, வரதராஜ பெருமாள் கோவில், இரட்டைக் குழி தெரு, ராதாகிருஷ்ணன் நகர், தியாகப்பத்தெரு, மண்ணப்ப முதலி தெரு ஆகிய முக்கிய வீதிகளில் பயணித்து பேரணிப் பிரச்சாரத்தை முடித்துவைத்தனர்.