Skip to main content

“தனது மாளிகையிலிருந்து ஜனாதிபதி வெளியேறுவாரா?” - மத்திய அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்

Published on 29/01/2023 | Edited on 29/01/2023

 

Jawahirullah condemns the central government for changing the name of the President's Garden

 

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் 'முகலாய' தோட்டம் இருக்கிறது. இந்த தோட்டத்தின் பெயரை மாற்றி ‘அம்ரித் உதயன்’ என புதிய பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பெயர் மாற்ற நடவடிக்கையில் மத்திய மோடி அரசை கடுமையாக கண்டித்திருக்கிறார் மனித நேய கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டத்தின் பெயரை அம்ரித் உதயன் என்று மாற்றம் செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய மற்றும் மேற்கத்திய கட்டடக் கலை பாணிகள் கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் ராஷ்டிரபதி பவன் கட்டடம் போலவே, லுட்யென்ஸ் இந்தத் தோட்டத்தையும் முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் பாணிகளை இணைத்து உருவாக்கினார். முகலாயர் பாணி கால்வாய்கள், மேற்தளங்கள், பூக்கள் அடர்ந்த புதர்கள் போன்றவை ஆங்கிலேயர் பாணி மலர் படுக்கைகள், புல்வெளிகள், தனியார் ஹெட்ஜ்களுடன் அழகாக ஒன்று கலந்து உருவாக்கப்பட்டது அந்தப் பூங்கா.

 

இந்தப் பெயர் மாற்றம் குறித்து அமிர்த காலத்தில் அடிமை மனப்பான்மையிலிருந்து வெளியே வருவது மிகவும் அவசியமான ஒன்று. அதன்படி, அடிமை மனப்பான்மையிலிருந்து வெளியேறும் மோடி அரசின் மற்றொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு இது என்று பாஜகவின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார். இது அப்பட்டமான மத அடிப்படைவாத செயலாகும். முகலாயர் என்ற பெயர் இருப்பதினாலேயே பெயர் மாற்றம் செய்வது என்பது ஒன்றிய அரசின் மத சகிப்பின்மையை வெளிப்படுத்தி இருக்கிறது. குடியரசுத் தலைவர் வசிக்கும் ராஷ்டிரபதி பவன் என்பது கற்பனைக்கு உயிரூட்டக்கூடிய மற்றும் தலைசிறந்த கட்டடக் கலைஞர்களாக ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கருதப்பட்ட சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரின் படைப்பாற்றலால் உருவாக்கப்பட்டது. 

 

அவர்கள் கருத்துப்படி பார்த்தால் அந்த கட்டடத்திலேயே குடியரசுத் தலைவர் வசிக்கக் கூடாது. அடிமை மனப்பான்மையின் வெளிப்பாடு என்று கருதி குடியரசுத் தலைவர் அந்த மாளிகையை விட்டு வெளியேறி விடுவாரா என்று கேள்வி எழுப்பத் தோன்றுகிறது. நாட்டின் முக்கிய பிரச்சனைகளை திசை திருப்பும் நோக்கில் அரசியல் ஆதாயத்திற்காக இதுபோன்ற முன்னெடுப்புகளை ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் இதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்கின்றேன் " என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘எது சனநாயகம்?’ - எழுத்தாளர் நா. அருணின் முதல் படைப்பு

Published on 12/02/2024 | Edited on 13/02/2024
'Etu Sananayakam?' is the first book of writer Na.Arun

‘பிரதமர் இளைய எழுத்தாளர்’ திட்டத்தின் கீழ் எழுத்தாளர் நா. அருண் எழுதிய எது சனநாயகம்? என்ற நாவல் நூலாக்கம் பெறத் தேர்வாகியுள்ளது. இந்தியக் கல்வி அமைச்சரகத்தின் கீழ் இயங்கும் தேசியப் புத்தக அறக்கட்டளை ரூ. 3 லட்சம் உரிமைத் தொகை வழங்கி, நூலை ஓராண்டிற்குள் 23 மொழிகளில் மொழிபெயர்த்து, அதனை இந்திய அரசின் மிக முக்கிய ஒருவரைக் கொண்டு வெளியிடவிருக்கிறது. 

இது தொடர்பாக எழுத்தாளர் நா. அருண், “என் நூலின் தலைப்பு ‘எது சனநாயகம்?’ இது தொடர்பாக இந்தியக் குடியரசுத் தலைவருடன் ஓர் உரையாடலுக்கு டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனுக்கு அழைக்கப்பட்டேன். எழுத்தாளராகத் தமிழ் இலக்கிய உலகினில் என் முதல் படைப்பான ‘எது சனநாயகம்?’ என்ற நூலுடன் வெகு விரைவில் காலடி எடுத்து வைக்கவிருக்கிறேன்.

'Etu Sananayakam?' is the first book of writer Na.Arun

இத்தனை ஆண்டுகாலமாக என் பேச்சிலும் எழுத்திலும் எப்போதும் இருக்கும் சுயமரியாதையும் பேசாப் பொருளும் குரலற்றவர்களின் குரலும் இனிவரும் என் நூல்களிலும் இருக்குமென்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலக்கிய உலகில் யாருக்கும் அடிவருடிக் கொடுக்காமல், யார் காலிலும் விழாமல், யாரையும் ஆசானாக ஏற்காமல், சொந்தச் சரக்கை மட்டும் நம்பி சுய அறிவை மட்டும் துணையாக்கி எழுத வந்திருக்கிறேன். வரலாறு என்னை நினைவில் கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் உங்களுடன் இச்செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை டிஸ்மிஸ் செய்ய கோரி ஐஆர்எஸ் அதிகாரி கடிதம்! 

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
IRS official letter demanding dismissal of Union Minister Nirmala Sitharaman

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் என்பவருக்கு கடந்த ஜூலையில் அமலாக்கத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் உள்ள முகவரியில் சாதி பெயரை குறிப்பிட்டு சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஜூலை மாதம் 5 ஆம் தேதி ஆஜராக கூறி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மனில் ஆஜராவதற்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு தங்களது ஆதார், வங்கிக் கணக்கு புத்தகத்துடன் சென்று குறிப்பிட்ட தேதியில் ஆஜராகியுள்ளனர்.

இந்த சம்மன் தொடர்பாக சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி ஆஜராக வந்த எழுதப் படிக்கத் தெரியாத பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகள் இருவரும் மிரட்டி துன்புறுத்தப்பட்டதாக நுங்கம்பாக்கம் போலீசில் வழக்கறிஞர் பிரவீனா என்பவர் மூலம் புகார் அளித்திருந்தனர். இதனையடுத்து விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பியது தொடர்பாக அமலாக்கத்துறை மீது அளிக்கப்பட்ட புகாரின் மீது போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த புகார் குறித்து வழக்கறிஞர் பிரவீனாவிடம் நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணையை நடத்தினர். அதேசமயம் விவசாயிகளின் 6.5 ஏக்கர் விவசாய நிலத்தை அபகரிக்கும் நோக்கில் சேலம் மாவட்ட பாஜக நிர்வாகி குணசேகரன் என்பவர் தொடர்ந்து பல்வேறு அச்சுறுத்தல்களையும், கொலை மிரட்டல்களையும் விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்தே அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் சாதிப் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறைக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி சாதிப் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டியும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகிய இருவரும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளரை சந்தித்து  புகார் மனு அளித்துள்ளனர். எஸ்.பி. அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் நிலத்தை அபகரிக்க முயன்ற விவகாரத்தில் பாஜக நிர்வாகி குணசேகரன் மீதும் நடவடிக்கை எடுக்க மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.

IRS official letter demanding dismissal of Union Minister Nirmala Sitharaman

இந்நிலையில் அமலாக்கத்துறை சார்பில் விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பியது தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு ஜிஎஸ்டி துணை ஆணையரும், ஐஆர்எஸ் அதிகாரியுமான பாலமுருகன் கடிதம் எழுதியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில், “சம்மன் அனுப்பப்பட்ட இரு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 450 ரூபாய் மட்டுமே இருப்பு உள்ளது. இரு விவசாயிகளும் அரசு சார்பில் வழங்கப்படும் ஓய்வூதியம் ஆயிரம் ரூபாய் மற்றும் ரேஷனில் அத்தியாவசிய பொருட்கள் பெற்று வருகின்றனர். பாஜக பிரமுகருக்கும், சம்பந்தப்பட இரு விவசாயிகளுக்கும் இடையே நிலப்பிரச்சனை உள்ள நிலையில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பபட்டுள்ளது. சாதியை குறிப்பிட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு மத்திய நிதியமைச்சர் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.