Skip to main content

“தனது மாளிகையிலிருந்து ஜனாதிபதி வெளியேறுவாரா?” - மத்திய அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்

Published on 29/01/2023 | Edited on 29/01/2023

 

Jawahirullah condemns the central government for changing the name of the President's Garden

 

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் 'முகலாய' தோட்டம் இருக்கிறது. இந்த தோட்டத்தின் பெயரை மாற்றி ‘அம்ரித் உதயன்’ என புதிய பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பெயர் மாற்ற நடவடிக்கையில் மத்திய மோடி அரசை கடுமையாக கண்டித்திருக்கிறார் மனித நேய கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டத்தின் பெயரை அம்ரித் உதயன் என்று மாற்றம் செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய மற்றும் மேற்கத்திய கட்டடக் கலை பாணிகள் கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் ராஷ்டிரபதி பவன் கட்டடம் போலவே, லுட்யென்ஸ் இந்தத் தோட்டத்தையும் முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் பாணிகளை இணைத்து உருவாக்கினார். முகலாயர் பாணி கால்வாய்கள், மேற்தளங்கள், பூக்கள் அடர்ந்த புதர்கள் போன்றவை ஆங்கிலேயர் பாணி மலர் படுக்கைகள், புல்வெளிகள், தனியார் ஹெட்ஜ்களுடன் அழகாக ஒன்று கலந்து உருவாக்கப்பட்டது அந்தப் பூங்கா.

 

இந்தப் பெயர் மாற்றம் குறித்து அமிர்த காலத்தில் அடிமை மனப்பான்மையிலிருந்து வெளியே வருவது மிகவும் அவசியமான ஒன்று. அதன்படி, அடிமை மனப்பான்மையிலிருந்து வெளியேறும் மோடி அரசின் மற்றொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு இது என்று பாஜகவின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார். இது அப்பட்டமான மத அடிப்படைவாத செயலாகும். முகலாயர் என்ற பெயர் இருப்பதினாலேயே பெயர் மாற்றம் செய்வது என்பது ஒன்றிய அரசின் மத சகிப்பின்மையை வெளிப்படுத்தி இருக்கிறது. குடியரசுத் தலைவர் வசிக்கும் ராஷ்டிரபதி பவன் என்பது கற்பனைக்கு உயிரூட்டக்கூடிய மற்றும் தலைசிறந்த கட்டடக் கலைஞர்களாக ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கருதப்பட்ட சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரின் படைப்பாற்றலால் உருவாக்கப்பட்டது. 

 

அவர்கள் கருத்துப்படி பார்த்தால் அந்த கட்டடத்திலேயே குடியரசுத் தலைவர் வசிக்கக் கூடாது. அடிமை மனப்பான்மையின் வெளிப்பாடு என்று கருதி குடியரசுத் தலைவர் அந்த மாளிகையை விட்டு வெளியேறி விடுவாரா என்று கேள்வி எழுப்பத் தோன்றுகிறது. நாட்டின் முக்கிய பிரச்சனைகளை திசை திருப்பும் நோக்கில் அரசியல் ஆதாயத்திற்காக இதுபோன்ற முன்னெடுப்புகளை ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் இதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்கின்றேன் " என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மூன்றாவது முறையாக பிரதமராகும்' மோடி'-டெல்லியில் கட்டுப்பாடுகள் தீவிரம்

Published on 09/06/2024 | Edited on 09/06/2024
nn

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இன்று  பிரதமர் பதவியேற்பு மற்றும் அமைச்சரவை பதவியேற்பு விழா பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாட்டின் பிரதமராக மூன்றாவது முறை நரேந்திர மோடி இன்று பதவியேற்க இருக்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று இரவு 7:15 மணிக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. குடியரசு தலைவர் மாளிகையில் மோடி மற்றும் அமைச்சர்களுக்கு திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்த விழாவில் வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்கும் தலைவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்தும் நடைபெற இருக்கிறது. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மாலத்தீவு அதிபர் முகமது மொய்சு, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மொரிஷியஸ் பிரதமர் பிரவீந்த் குமார், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், பூட்டான் பிரதமர் ஷரிங் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.நாட்டில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய நபர்கள் உள்ளிட்டோரும் இந்த விழாவில் பங்கேற்கின்றனர். விளையாட்டு, சினிமா பிரபலங்கள், மதத்தலைவர்கள், பத்ம விருது பெற்றவர்கள் விழாவில் கலந்து கொள்கின்றனர். 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், தொழிலாளர்கள், ஊழியர்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டுமானம், உத்தரகாண்ட் நிலச்சரிவு மீட்புப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.

பதவி ஏற்பு விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. டோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எல்லைகளில் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஐந்து கம்பெனி நாடாளுமன்ற பாதுகாப்புப் படையினர், என்.எஸ்.ஜி கமாண்டோக்கல் என பல அடுக்கு பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பல பகுதிகளில் இருந்து மத்திய டெல்லி செல்லும் பாதைகள் பொதுமக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜவஹர்லால் நேருக்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் பெருமையை பெறுகிறார் மோடி.

Next Story

குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

Published on 07/06/2024 | Edited on 07/06/2024
Prime Minister Modi meets the President

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. இதனால் ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார்.

அதே சமயம் இலாகா ஒதுக்கீடு தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இல்லத்தில் ஆலோசனை நடைபெற்றது. முக்கிய இலாகாக்களை தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் கோரும் நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக ஜெ.பி.நட்டா, சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் எனப் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரளெபதி முர்முவை சந்தித்து பிரதமர் மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் கடிதத்துடன் குடியரசுத் தலைவரை சந்தித்தார். இதனையடுத்து ஆட்சியமைக்க பிரதமர் மோடிக்கு முறைப்படி குடியரசுத் தலைவர் திரளெபதி முர்மு அழைப்பு விடுத்தார். முன்னதாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சியின் தலைவராக பிரதமர் மோடி இன்று தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.