விஜய்யின் மக்கள் இயக்கம் சமீப காலமாகத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து இயக்கத்தில் உள்ள பல்வேறு அணிகளை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வந்தது. மேலும் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற விஜய் முடிவு செய்திருந்தார். இதனையடுத்து விஜய்யின் மக்கள் இயக்க நிர்வாகிகளிடம், ‘பூத் கமிட்டிகளை வலுப்படுத்துங்கள்; எப்போதும் தேர்தலுக்குத் தயாராக இருங்கள்; நமது இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் காலம் வந்துவிட்டது’ என நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தி வந்தார்.
இந்த சூழலில் விஜய்யின் கட்சி பெயர் அறிவிக்கப்பட்டு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் சூட்டப்பட்டு டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். அதே சமயம் நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரைப்படத்துறையில் செல்வாக்கு மிக்கவராக கலைப்பணி ஆற்றும் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டிருப்பதை வாழ்த்தி வரவேற்கிறேன். மக்களைப் பிளவுபடுத்துகிற அரசியலுக்கு எதிராகவும், மக்களின் வளர்ச்சிக்கு தடையாகவும் இருக்கிற சக்திகளுக்கு எதிராக அவர் கருத்து கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று சுட்டிக்காட்டி அனைவரும் பிறப்பால் சமம் என்ற கருத்தை அவர் வலியுறுத்தியிருப்பது இன்றைய அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அரசியல் கட்சியை ஏன் தொடங்குகிறோம் என்பதற்கான அவரது விளக்கம் தமிழக அரசியலில் ஆரோக்கியமான சூழல் உருவாக உதவும் என்று நம்புகின்றேன். அவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.