Skip to main content

"ஆளுநரின் செயல்பாடுகளை அரசியலாக்க நினைப்பது ஏற்புடையதல்ல" - ஜி.கே.வாசன் பேட்டி

Published on 02/12/2022 | Edited on 02/12/2022

 

 'It is not appropriate to think of politicizing the activities of the governor' - GK Vasan interview

 

ஆளுநரின் செயல்பாடுகளை அரசியலாக்க நினைப்பது ஏற்புடையது அல்ல என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

 

தமிழக ஆளுநரைச் சந்தித்த பிறகு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசுகையில், ''தமிழக ஆளுநரை நான் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். மேலும், முக்கியமாக திருவையாறில் ஆண்டுதோறும் நடைபெறும் தியாகபிரம்ம சபையினுடைய விழாவில் ஒருநாள் கலந்து கொள்வதற்காக அவரிடம் பேசினேன். சந்திப்பு நடந்ததுடைய நோக்கம் இதுதான். இதில் வேறு எந்த நோக்கமும் கிடையாது. இருந்தாலும் ஆளுநரிடம் தமிழகத்தில் நிலவுகின்ற பல்வேறு அரசியல் சூழ்நிலைகள் குறித்து என்னுடைய கருத்துக்களைப் பொதுவாக தெரிவித்தேன். 

 

சென்ற வாரம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினுடைய சிறப்பு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. ஒன்பதாம் ஆண்டினுடைய தொடக்க விழாவை முன்னிட்டு சென்னையில் நடந்தது.  அதில் நாடாளுமன்றத் தேர்தலில் வெல்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கான ஒரு செயல் திட்டத்தை இயக்கத்திற்குக் கொடுத்திருக்கிறோம். தை பிறந்தவுடன் அந்த செயல் திட்டம் இயக்கத்தின் சார்பில் மாவட்டம், வட்டாரம், நகரம், கிராம ரீதியில் தொடங்கி செயல்பட இருக்கிறது. அதனடிப்படையில் கூட்டணிக்கு த.மா.கா வலுசேர்க்கும். நிற்கும் இடங்களில் வெற்றியைப் பெறுவதற்கான சூழ்நிலை ஏற்படுத்தும். சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டியது ஆளுநரின் கடமை. அதற்கேற்றவாறு அவர் செயல்படுகிறார் என்று நான் முழுமையாக நம்புகிறேன். ஆளுநரின் செயல்பாடுகளை அரசியலாக்க நினைப்பது ஏற்புடையது அல்ல. அதை பொதுமக்கள் விரும்பவில்லை என்பது தான் என்னுடைய கருத்து'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார். 

Next Story

'தேர்தல் பணியைவிட சிறுத்தையை பிடிப்பதே முதல் பணி'-ஜி.கே.வாசன்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
'The first task is to catch the leopard rather than the election task' - GK Vasan speech

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இரவில் நடமாடும் சிறுத்தையை பிடிக்கும் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் நகரப் பகுதியில் உள்ள செம்மங்குளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை வேட்டையாடும் வகையில் சிறுத்தை ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சிறுத்தையின் கால்தடத்தை வைத்து அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

தொடர்ந்து மூன்று நாட்களாக அந்த பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் பாதுகாப்பு கருதி இன்று (04/04/2024) அந்த உள்ள 9  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

சிறுத்தை தேடுதல் வேட்டையில் முதல் நாள் கேமராவில் சிக்கிய அந்த சிறுத்தை இரண்டாவது நாள் சிக்கவில்லை என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியநாதபுரம் பகுதியில் நேற்று இரவு வனத்துறையினர் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பின் தொடர்ந்ததால் சிறுத்தையை கண்டுபிடிக்கும் பணியில் கடும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், எனவே சிறுத்தையை பிடிக்கும் வரை வனத்துறையினரை பொதுமக்கள் பின் தொடர்ந்து இடையூறு செய்ய வேண்டாம் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சிறுத்தையை தேடும் பணிக்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு கேட்கவும் வனத்துறை முடிவு செய்துள்ளது. கூறைநாடு, செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம், சித்தர்காடு என பல இடங்களுக்கு தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருப்பது வனத்துறையினருக்கு அதனை பிடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொது மக்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை பகுதியில் பிரச்சாரம் செய்ய வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், 'தேர்தல் பணியை விட சிறுத்தையை பிடிப்பதே முக்கியம். ஏனென்றால் வாக்காளர்கள், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வைப்பது அரசின் கடமை' என தெரிவித்தார்.