நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்...
''அதிமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தேர்தல் வியூகங்கள், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எதிர்வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் எம்.ஜி.ஆரின் ஆசியோடும், ஜெயலலிதாவின் ஆசியோடும் மகத்தான வெற்றியினைப் பெறுவார்கள்.
தமிழ்நாட்டில் எட்டு மாதகால ஆட்சியினுடைய அவலநிலைக்கு மக்கள் மாபெரும் வெற்றியை அதிமுகவுக்கு பரிசாக அளிக்க இருக்கிறார்கள். உலகத்திலேயே எட்டு மாத காலத்தில் வேகமாக மிக அதிவேகமாக அதிருப்தியை சம்பாதித்த கட்சி என்றால் அது திமுக அரசு தான். எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டது திமுக. சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் சந்தி சிரிக்கின்ற வகையில் காவல்துறைக்கே பாதுகாப்பில்லை, பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லை.
அடாவடித்தனங்கள், அராஜகங்கள் ஆளுங்கட்சியால் அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகிறது. உதாரணமாக நேற்றைய தினம் திருவெற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சங்கர் மாநகராட்சி ஏ.இ-யை தாக்க முற்பட்டுள்ளார். ஒப்பந்ததாரரைத் தாக்கியதோடு அவர்கள் கொண்டு வந்த தார் கலவை இயந்திரங்களையும் தூக்கி வீசியுள்ளார். இப்படி ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரே சட்டத்தை மீறுவது பத்திரிகை வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வந்தபிறகுதான் கே.பி.பி.சங்கர் கட்சி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். எங்களுடைய கேள்வி, சட்டத்தை மீறிய செயலுக்கு கட்சி பொறுப்பிலிருந்து மட்டும் எடுத்தா போதுமா?'' எனக் கேள்வி எழுப்பினார்.