நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நாடு, வளர்ச்சியில் நீண்ட பாய்ச்சலைப் பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 11வது பொருளாதார சக்தியாக இருந்தது. ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போருக்குப் பிறகும், பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், 200 ஆண்டுகள் நம்மை ஆண்ட பிரிட்டனை இந்தியா தோற்கடித்துள்ளது. இப்போது இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2024 இல், பிரதமர் மூன்றாவது முறையாக பிரதமராகும் போது, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.
இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஜாமீனில் இருக்கிறார்கள். ஒரு சிலர் சிறையில் இருக்கிறார்கள். ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப. சிதம்பரம் ஆகியோர் ஜாமீனில் இருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் உள்ளனர். திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது. தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க திமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்ட விவகாரத்திலும் தமிழர்களின் பண்பாட்டை காங்கிரஸ் மற்றும் திமுக எதிர்த்தது. தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜகதான் காத்து வருகிறது. தமிழ் இலக்கியம், மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு பாஜக உறுதியாக துணை நிற்கிறது” எனத் தெரிவித்தார்.
அதே சமயம் திருச்சியில் ஜே.பி.நட்டா இன்று ரோடு ஷோ செல்வதற்கு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.