விழுப்புரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்ய வந்தார் அரசன். இவர் வேட்பு மனுத் தாக்கலின் போது கட்ட வேண்டிய தொகையான ரூபாய் 12,500ஐ முன் தினமே தயார் செய்து வைத்துள்ளார்.
இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது, ரூபாய் 500 குறைந்துள்ளது. இதனால் அவரால் வேட்புமனுவை தாக்கல் செய்ய முடியவில்லை. முழுத் தொகையை ஏற்பாடு செய்துவிட்டு வாருங்கள், இன்னும் நாள் இருக்கிறது என்று அனுப்பி வைத்தனர் தேர்தல் அதிகாரிகள். 500 ரூபாய்க்காக இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாதா என்று அதிருப்தியடைந்து அங்கிருந்து வெளியேறினார்.
எப்படி பணம் குறைந்தது என்று அரசன் யோசித்து பார்த்திருக்கிறார். பணம் குறைந்ததற்கான காரணத்தை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் தனது மனைவியை தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார். அப்போது அவரது மனைவி, காய்கறி வாங்குவதற்காக ரூபாய் 500ஐ எடுத்ததாக தெரிவித்திருக்கிறார்.