அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் நடத்தப்பட்டு வரும் சோதனை தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை முன்னாள் அமைச்சரும், தற்போது நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான காமராஜ், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்திருப்பதாக புகார் பெறப்பட்டு சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவருக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில் தஞ்சையில் 38, சென்னை-6, தஞ்சை-4, திருச்சி -3, கோவையில் ஒரு இடம் என மொத்தம் 52 இடங்களில் சோதனை நடைபெற்றது.இந்த சோதனையில் 15.50 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், வங்கி பெட்டக சாவி, ஐபோன், கணினி, பென் ட்ரைவ், ஹார்ட் டிஸ்க், ஆவணங்கள், 41.06 லட்சம் ரூபாய்,963 சவரன் நகை, 23,960 கிராம் வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த சோதனை நடைபெற்றதாக காமராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, 'முற்றிலும் உள்நோக்கம் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கையாக சோதனை நடந்துள்ளது. சோதனையால் என்னையோ,தொண்டர்களையோ ஒன்றும் செய்துவிட முடியாது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை வந்தால் பல்வேறு கட்சிகள் ஆட்டம் காணும்' என தெரிவித்துள்ளார்.