publive-image

சிம்பு நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் நேற்று (30.03.2023) திரையரங்குகளில் வெளியான படம் 'பத்து தல'. இப்படத்தைக் காண சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் பெண்கள் சிலர் அவர்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் டிக்கெட் எடுத்துள்ளனர். அவர்கள் சாலையோரம் பாசிமணி விற்பவர்கள் என்பதை அறிந்த திரையரங்க ஊழியர், அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளார். இதனால் அங்கே இருந்த ரசிகர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் பலரும் தீண்டாமை கடைப்பிடித்துள்ளதாகக் கண்டனங்கள் எழுப்பி வந்தனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் அவரது ட்விட்டர் பக்கத்தில் "அனுமதிக்க மறுத்ததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது" எனக் கண்டனம் தெரிவித்திருந்தார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட திரையரங்க நிர்வாகம், "இப்படம் யு/ஏ சான்றிதழுடன் வெளியாவதால் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சட்டப்படி திரைப்படத்தையும் பார்க்க அனுமதிக்க முடியாது. 2, 6, 8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் வந்திருந்த குடும்பத்தினருக்கு எங்கள் டிக்கெட் சோதனை ஊழியர்கள் இந்த அடிப்படையில் அனுமதி மறுத்துள்ளனர்" என விளக்கம் கொடுத்திருந்தனர். மேலும், பின்பு அவர்களை அனுமதித்ததாகக் குறிப்பிட்டு அவர்கள் படம் பார்க்கும் வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்கள்.

இதையடுத்து இந்த விவகாரம் பெரிதாக மாற கோயம்பேடு காவல் ஆய்வாளர் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளார். மேலும், அமைந்தகரை வட்டாட்சியரும் திரையரங்குக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண்மணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை உள்ளே விட மறுத்த திரையரங்க பணியாளர்கள் ராமலிங்கம் மற்றும் குமரேசன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இச்சம்பவம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பதிலளித்த அவர், “தீண்டாமை செயல் கண்டிப்பாக கண்டிக்கத்தக்கது. திரையரங்க உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்டுள்ளார்கள் என நினைக்கிறேன். அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். இது தொடர்பாக கண்டிப்பாக அந்த சமுதாய மக்களை சந்தித்து பேசுகிறேன்” எனக் கூறினார்.