Skip to main content

''நான்தான் அமைச்சர்'' - மே 2ஆம் தேதி வரை காத்திருக்க முடியாத வேட்பாளா்கள்

Published on 10/04/2021 | Edited on 10/04/2021

 

ddd

 

தேர்தல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று முடிந்த நிலையில், மக்களின் தோ்வு யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு நாம் மே 2ஆம் தேதிவரை காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதிமுக, திமுக கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தெரியாத நிலையில்,  தோ்தல் முடிந்த ஓரிரு நாட்களிலேயே நான் வெற்றி பெற்றால் மீண்டும் அமைச்சராகிவிடுவேன் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

 

அதிலும், அதிமுக முன்னாள் அமைச்சா் வெல்லமண்டி நடராஜன், ''நான்தான் அடுத்த அமைச்சரும், திருச்சி மாநகா் மாவட்டச் செயலாளரும்'' என்று கூறிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். “மேலிடம் எந்தத் துறையைக் கொடுத்தாலும் நான் அதை சிறப்பாக செய்வேன். நான் எதையும் வற்புறுத்தி வாங்க மாட்டேன்” என்று இவருடைய பங்கிற்கு கூறி வருகிறார். அடுத்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் ப.குமார், ''நான் வெற்றிபெற்றால் நிச்சயம் எனக்கு பொதுப்பணித்துறை வரும், நான் அமைச்சர் ஆகிவிடுவேன்'' என்று கூறி வருகிறார். 

 

அதிமுக நிர்வாகிகள்தான்அப்படி என்றால், திமுகவும் அப்படித்தான். எப்போதும் அமைச்சராக இருக்க வேண்டும் என்று விரும்பும் கே.என்.நேரு, தன்னுடைய தொகுதியில் திமுகவில் அவர்தான் அமைச்சர் என்ற மனநிலையை அவருடைய தொண்டா்கள் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனா். அண்ணன் அடுத்த உள்ளாட்சித்துறை அமைச்சர் என்று தற்போது பேச ஆரம்பித்துவிட்டனா். அதை கேட்டும் கேட்காதது போல கே.என்.நேரு இருந்தாலும், அவருக்குள்ளும் இந்த ஆசை இருப்பதை தொண்டா்கள் பிரதிபலித்து வருகின்றனா்.

 

இவா்கள் ஒருபக்கம் இருந்தாலும், அமமுக வேட்பாளா் மனோகரன், “நான் வெற்றிபெற்றால் நான்தான் அடுத்த மாநகா் மாவட்டக் கழகச் செயலாளா்” என்றும் சொல்ல ஆரம்பித்துள்ளார். தோ்தல் நடந்து முடிந்து ஓரிரு நாட்கள் ஆன நிலையில், யார் அமைச்சர் ஆவார்கள்? அவா்கள் எந்த துறைக்கு அமைச்சர் ஆவார்கள்? என்ற இந்த பேச்சு தொண்டா்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. 

 

ஒவ்வொருவரும் அவா்கள் சார்ந்திருக்கும் ஆதரவாளருக்கு சாதகமாக இருந்தாலும், பொதுமக்களும், நடுநிலையாளா்களும் இந்தப் பிரச்சாரத்தை நகைச்சுவையாக பார்க்கின்றனா். வாக்குப்பதிவின் முடிவுகள் வெளிவராத நிலையில், அதற்குள் எந்த துறைக்கு எந்த அமைச்சர் என்று பேசுவது கேலிகூத்தாக உள்ளதாக பொதுமக்கள் முணுமுணுத்து வருகின்றனா்.

 

 

சார்ந்த செய்திகள்