
பாஜக சார்பில் சென்னையில் மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று (12.02.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பாஜக மாநிலத் தலைவர், “நான் பாஜக தலைவராகத் தொடர முடியாது என்று எனக்குத் தெரியும். ஆனால், நான் இங்கிருந்து செல்லும்போது அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விட மாட்டேன்” எனப் பேசியிருந்தார். இந்நிலையில் சென்னை அருகே உள்ள ஒரகடத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (13.02.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் தமிழக பாஜக மாநிலத் தலைவரின் பேச்சுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசுகையில், “அறிவாலயத்தை அசைத்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்தவர்கள் இன்றைக்கு அடங்கி மண்ணோடு மண்ணாகப் போனதாகத் தான் கடந்த கால வரலாறு. எப்போது எல்லாம் திமுகவை அழிக்க வேண்டும் புறப்படுகிறார்களோ எப்போதெல்லாம் திமுகவை அழைப்பேன் என்று கூறுகிறார்களோ அவர்களின் அழிவுகளுக்குத் தொடக்கப்பள்ளி தான் அது என்பது தான் பொருள். திமுகவை பொறுத்தவரையில் திமுக தொண்டர்கள் முதல் இரண்டாம் கட்ட தலைவர்கள் வரை உணர்வால் பின்னிப் பிணைந்தவர்கள். தமிழ்நாட்டிலே பிறந்த தமிழ்நாட்டிலே வளர்ந்து தமிழ்நாட்டு அரசியலைக் கரைத்துக் குடித்தவர்கள். அவரைப் போல் இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல திமுக தொண்டர்கள்.
திமுகவின் ஆலயமாகக் கருதப்படுகின்ற அறிவாலயத்தில் தொட்டுக் கூட பார்க்க முடியாத அவர் எப்படி செங்கற்களைப் பிடுங்க முடியும். இரும்பு மனிதர் என்று போற்றப்படுகின்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொட்டு 75 ஆண்டுக் காலம் கடந்த திமுகவை அசைத்துப் பார்ப்பதற்கு இன்னொருவர் பிறந்து வர வேண்டும். இவரின் ஆணவ பேச்சுக்குத் தமிழக மக்கள் 2026ஆம் ஆண்டு நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் மிருக பலத்தோடு திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர வைப்பர். 2026ஆம் ஆண்டு நடைபெற நடைபெறுகின்ற தேர்தலில் ஒரு சட்டமன்ற தேர்தல் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கு உண்டான முயற்சியை அவர் மேற்கொள்ள வேண்டும். அவர் எங்கு நின்றாலும் தமிழ்நாட்டில் அவரை புற முதுகிட்டு ஓடச் செய்ய திமுக கடைக்கோடி தொண்டனை நிற்க வைத்து முதல்வர் மு க ஸ்டாலின் அவரை மண்ணை கவ்வ வைப்பார்” எனப் பேசினார்.