Skip to main content

திமுக பிரமுகர் கொலை வழக்கில் பிரபல ரவுடி உள்பட 4 பேர் நீதிமன்றத்தில் சரண்!

Published on 05/02/2020 | Edited on 05/02/2020

 


ஓசூரில் கடந்த ஞாயிறன்று திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பிரபல ரவுடி உள்பட நான்கு பேர் கொடுமுடி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். அவர்களை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

 

 Mansoor Ali -



கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் இமாம்பாடாவைச் சேர்ந்தவர் மன்சூர் அலி (49). ரியல் எஸ்டேட் அதிபர். இவர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சிறுபான்மை அணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப். 2), ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தார். 


அப்போது, இரண்டு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் பலர் முன்னிலையில் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பினர்.


இந்த பரபரப்பு சம்பவம் குறித்து ஓசூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். 


இதற்கிடையே, மன்சூர் அலி கொலை வழக்கில், கிருஷ்ணகிரி முதுகாணவள்ளியைச் சேர்ந்த சீனிவாஸ் மகன் சந்தோஷ்குமார் (22), ஓசூர் சாந்தி நகரைச் சேர்ந்த கோபால் ரெட்டி மகன் கஜா என்கிற கஜேந்திரன் (37), மருந்தாண்டப்பள்ளியைச் சேர்ந்த சந்திராரெட்டி மகன் யஷ்வந்த்குமார் (23), தேன்கனிக்கோட்டை ராம் நகரைச் சேர்ந்த துரைசாமி மகன் கோவிந்தராஜ் (23) ஆகிய நான்கு பேர் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (பிப். 4) சரணடைந்தனர். 


அவர்கள் நால்வரையும் கோவை மத்திய சிறையில் அடைக்க மாஜிஸ்ட்ரேட் சபீனா உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.




சரணடைந்த நான்கு பேரில் கஜா என்கிற கஜேந்திரன் மீது பல்வேறு அடிதடி, கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கடந்த 2016ம் ஆண்டில், கிருஷ்ணகிரி மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செயலாளராக இருந்த சூரி என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கிலும் அப்போது கஜா என்கிற கஜேந்திரன் கைது செய்யப்பட்டிருந்தார். ஒருமுறை குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளார். 


சரணடைந்த நால்வரையும் விரைவில் காவலில் எடுத்து விசாரிக்க இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. எனினும், திமுக பிரமுகர் மன்சூர் அலி கொல்லப்பட்டு மூன்று நாள்கள் ஆகியும் இதுவரை அவருடைய கொலைக்கான காரணங்களைக் கண்டுபிடிக்க முடியாமல் ஓசூர் காவல்துறையினர் தடுமாறி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்