உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் நடைபெற்ற கட்சியின் பாராட்டு விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் வந்தனர். மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு இருவரும் ரேபரேலிக்கு வருவது இதுவே முதல் முறை என்பதால் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், “எங்களை வெற்றிபெறச் செய்த அனைத்து தலைவர்களுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும், அமேதி மற்றும் ரேபரேலி மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முறை அமேதி, ரேபரேலியில் காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாகப் போராடியது. உத்தரப்பிரதேசம் மற்றும் நாடு முழுவதும் நான் சமாஜ்வாதி கட்சிக்குச் சொல்ல விரும்புவது என்னவென்றால் இந்த முறை சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் காங்கிரஸ் தலைவர்களுடன் தேர்தலில் ஒற்றுமையாகப் போராடினார்கள்.
அமேதியில் கிஷோரி லால் சர்மாவையும், ரேபரேலியில் என்னையும், உத்தரப்பிரதேசத்தில் இந்தியக் கூட்டணி எம்.பி.க்களையும் வெற்றி பெறச் செய்தீர்கள். இதன் மூலம் அரசியலை மாற்றிவிட்டீர்கள். ஒட்டுமொத்த நாடும் அரசியல் சாசனத்தைத் தொட்டால் மக்கள் என்ன செய்வார்கள் என்று பாருங்கள் என்று நாட்டின் பிரதமருக்குப் பொதுமக்கள் செய்தி அனுப்பியுள்ளனர். பாஜக வேட்பாளர் அயோத்தி தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தார். என் சகோதரி (பிரியங்கா காந்தி) வாரணாசியில் போட்டியிட்டு இருந்தால் பிரதமர் வாரணாசி தேர்தலில் 2 இலிருந்து 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருப்பார்” எனத் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசுகையில், “இது ஒரு வரலாற்று வெற்றி. நாட்டில் தூய்மையான அரசியல் வேண்டும் என்று நீங்கள் அனைவரும் தேசம் முழுவதும் செய்தியை அனுப்பியதை நான் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முடிவுக்காக நாங்கள் இரவும் பகலும் உழைத்தோம். எனது சகோதரரை வெற்றிபெறச் செய்த ரேபரேலி மக்களுக்கு நன்றி. நீங்கள் எங்களுக்காகக் காட்டிய உற்சாகத்துடன் நாங்கள் உங்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றுவோம்” எனத் தெரிவித்தார். இந்த மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி கேரளா மாநிலம் வயநாடு தொகுதி மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.