விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனம் சார்பில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று (06.12.2024) மாலை சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் நடைபெறுகிறது. த.வெ.க. தலைவர் விஜய் இந்நூலை வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “தமிழ்நாட்டில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டிய நேரம் இது. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா மேடையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் இல்லை. ஆனால் அவரின் மனசாட்சி இங்குதான் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும்” எனப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் பேசுகையில், “கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200 வெல்வோம் என்ற எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. நீங்கள் உங்களோட சுயநலனுக்காகப் பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026-ல் மக்களை மைனஸ் ஆக்கி விடுவார்கள். தொல். திருமாவளவன் புத்தக வெளியீட்டு விழாவிற்குக் கூட வர முடியாத அளவுக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்ந்து எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும், நான் இப்பொழுது சொல்கிறேன் அவருடைய மனசு முழுக்க முழுக்க இன்று நம்மோடு தான் இருக்கும்” எனப் பேசினார்.
இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் இது தொடர்பாகப் பேசுகையில், “வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதி என்ற நம்பிக்கை வினாகும் என்று ஒரு சிலர் அதிமேதாவிகளாக, தற்குறிகளாகக் களத்திற்கே வராதவர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எங்களுடைய நிலைப்பாடு 200 அல்ல 234 தொகுதியையும் திமுக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கைப்பற்றும். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக திமுகவுக்கு எப்போதெல்லாம் இது போன்ற அவதூறுகள் ஏற்படுகின்றதெல்லாம் அப்போதெல்லாம் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்ற திமுக 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிப்பார்கள். மீண்டும் 2026இல் தமிழக முதலமைச்சரின் மு.க. ஸ்டாலினை அரியணையில் ஏற்றும் வரை எங்கள் எங்களுடைய பயணம் எங்களுடைய வேகம் குறையாது” எனத் தெரிவித்தார்.