இந்த ஆண்டிற்கான முதல் சட்டசபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார். அதில், ஆளுநர் அரசு தயாரித்துக் கொடுத்த உரையை முழுவதுமாகப் படிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின், “ஆளுநர் அரசு கொடுத்த உரையை முழுவதுமாகப் படிக்கவில்லை” எனக் குற்றஞ்சாட்டி ஆளுநரின் உரை அவைக்குறிப்பில் இடம்பெறாது என்று தீர்மானம் கொண்டுவந்தார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. ட்விட்டரில் #getoutravi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்தது. ஆளுநரின் இத்தகைய செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, “தமிழ்நாடுன்னா பளீச்சின்னு சொல்லிடலாம் கஞ்சா நாடுன்னு. பேராவூரணியில் 850 கிலோ கஞ்சா பிடிபட்டது. ஸ்டாலின் வந்ததற்கு பின் எப்படி இவ்வளவு வருகிறது. இதனால் அந்த ஒரு வரியை மட்டும் படிக்காமல் நாகரீகமாக ஆளுநர் நடந்துள்ளார். ஆளுநர் கூட்டத்தில் முதல்வர் பேசுவது மரபு அல்ல. இம்மாதிரியான ஏற்பில்லாத விஷங்களில் ஆளுநர் தவிர்த்துப் பேசுவது புதிதல்ல.
பாரதியார், ஔவையார் போன்றவர்களைப் பற்றி ஆளுநர் படித்தது அச்சுக்கு செல்லாது என முதல்வர் சொல்கிறார். ஆனால், திராவிடமாடல், அமைதிப்பூங்கா ஆகியவை இருக்கும் என்கிறார். ‘ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தென் கருணாநிதி’ (Stalin is more dangerous than karunanidhi) என்பதை நான் இன்றைக்கு சொல்லவில்லை. ஒன்றரை வருடங்கள் முன்பே சொல்லிவிட்டேன். அதை இன்று ஸ்டாலின் நிரூபித்துக் கொண்டுள்ளார். தன்னை முதல்வர் மாற்றிக்கொள்வார்; திருத்திக்கொள்வார் என்பதை பாஜக எதிர்பார்க்கிறது” எனக் கூறினார்.