தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தாலேயே கொடிய கரோவை ஒழிக்க முடியும் என நிருபிக்கப்பட்டு வருவதால், தமிழ் மருத்துவத்தை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொண்டு வர வேண்டும் என போராடி வருகிறார் ’தமிழ்ப் பேரரசு கட்சி’யின் பொதுச்செயலாளரான இயக்குநர் கௌதமன்.
இது குறித்து இன்று அறிக்கை வெளியிட்டிருக்கும் கௌதமனிடம் நாம் பேசிய போது, ‘’கரோனாவினால் உயிர்பலி நிகழ்வதில் உலகத்தில் மூன்றாம் இடத்தில் இந்தியாவும், இந்தியாவில் இரண்டாம் இடத்தில் தமிழ் நாடும் இருக்கிறது. இன்றுவரை கரோனாவுக்கென உறுதியான மருந்தினை ஆங்கில மருத்துவத்தால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் பத்தாயிரம் கோடிகள் செலவு செய்தும் இரண்டாயிரம் உயிர்களுக்கு மேல் பறிகொடுத்திருக்கிறோம்.
ஆனால் சென்னை சாலிகிராமத்தில் அரசால் அமைக்கப்பட்ட கரோனாவுக்கான சித்த மருத்துவ மையத்தில், சில கோடிகளை மட்டும் செலவழித்து, 1,500-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று குணப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். தமிழ் மருத்துவத்தை எடுத்துக்கொண்ட ஒருவரின் உயிர் கூட பலியாகவில்லை. அதனால், கொடூர கரோனாவிற்கு மகத்தான மருந்தை கொண்ட சித்த வைத்தியத்தை தமிழ் நாட்டிலுள்ள அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் அமல்படுத்த வேண்டும். அதற்காக, போர்க்கால அடிப்படையில் படுக்கைகள் அமைத்து சித்த மருத்துவப் பிரிவினை தொடங்க வேண்டும் ‘’ என்கிறார் மிக அழுத்தமாக.
மேலும், நம்மிடம் பேசிய கௌதமன், ‘’ இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எந்த குடிமக்களுக்கும் இல்லாத ஆகச்சிறந்த மருத்துவம், தமிழ்க்குடியின் சித்த மருத்துவத்திற்கு மட்டுமே உண்டு. காலத்தால் கணக்கிட முடியாத "சிந்தாமணி" என்கிற மருத்துவ நூல் இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் ராவணனால் எழுதப்பட்டது. "அறிவன் மருத்துவம்" என்பது தொல்காப்பியர் காலத்தில் சித்தர்களால் எழுதப்பட்ட உன்னதமான மருத்துவ நூல். தமிழ் மன்னர்கள் தாங்கள் கட்டிய கோவில்களில் சித்தமருத்துவ நிலையங்களை நிறுவியிருந்தனர். அரசு கட்டுப்பாட்டில் திருச்செந்தூர் முருகன் கோவிலிலும், சென்னை வடபழனி முருகன் கோவிலிலும் இயங்கிக் கொண்டிருக்கிற சித்த மருத்துவ நிலையங்களே அதற்கு சாட்சிகளாக விளங்குகின்றன.
சித்த மருத்துவத்தின் மகத்துவம் தமிழக அரசுக்கு தெரியாமல் போனதில் அதிர்ச்சியொன்றுமில்லை. தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு நவீன அலோபதி மருத்துவர். இன்றைய சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் ஒரு நவீன கால்நடை மருத்துவர். இந்திய மருத்துவ கவுன்சில் தலைவரும் கூட ஒரு நவீன மருத்துவர். அந்த வகையில், சித்த மருத்துவத்தையும் பயன்படுத்தும் வகையில் சித்த மருத்துவர்களை தமிழக அரசின் சுகாதாரத்துறையில் நியமிக்க வேண்டும். தற்காலிகமாக சித்த மருத்துவர்கள் சிலரை நியமிப்பதற்காக,"பைவ் ஸ்டார்" ஏஜென்சி என்கிற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் பணிகளை தமிழக அரசு செய்து வருகிறது.
ஆங்கில மருத்துவர்களை நியமிக்க, அரசு மருத்துவ தேர்வு வாரியம் இருக்கும் போது படித்த சித்த மருத்துவர்களை இப்படி தனியார் நிறுவனத்திடம் தேர்வு செய்ய ஒப்படைப்பது சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மருத்துவத்திற்கான அரசின் செயல்பாடுகளை பினாமி நிறுவனங்களை உருவாக்கி செயல்படுத்துவதென்பது எவ்வகை அறம்? ஆங்கில மருத்துவர்களைப் போலவே ஐந்தரை ஆண்டுகள் முதல் எட்டரை ஆண்டுகள் வரை படித்து விட்டு காத்திருக்கும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட சித்த மருத்துவர்களை இப்படியெல்லாம் அவமானப்படுத்துவது நேர்மையா?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அரும்பாக்கத்திலுள்ள அண்ணா மருத்துவமனைக்கு எதிரில், சித்த மருத்துவ ஆராய்ச்சி தொடங்கப்படும் என்றும், இதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு செய்திருந்தார். அவர் வழி நின்று ஆட்சி செய்யும் நீங்கள் (எடப்பாடி அரசு ) அதனை ஏன் இன்னும் கிடப்பில் போட்டுள்ளீர்கள்? "டாம்கால்" என்பது தமிழக அரசின் மூலிகை வாரியம். அதன் மூலமாக சித்த மருந்துகள் தயாரிப்பது தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறதே ஏன்? தமிழ்நாடு அரசு ஏன் அதனை முறையாக விரிவு படுத்த வில்லை?
இப்படி பல கேள்விகள் இருக்கின்றன. அதனால், அரசு மருத்துவமனை முதல் ஆரம்ப சுகாதார மருத்துவமனை வரை அனைத்து இடங்களிலும் கொரோனாவுக்கென சித்த மருத்துவ படுக்கைகள் கொண்ட தனிப் பிரிவினை போர்க்கால அடிப்படையில் தொடங்கி அதற்குரிய மருத்துவர்களை விரைவாக பணியிலமர்த்தி ஆங்கில மருத்துவத்தோடு தமிழர்களின் பண்பாட்டு வாழ்வியலோடு இணைந்த வேதியியல் மருத்துவமான சித்த மருத்துவத்தையும் பயன்படுத்தி கொரானாவிடமிருந்து மரணம் இல்லாத தமிழகத்தை உருவாக்க அரசு முன் வரவேண்டும் ‘’ என போர்க்குரல் உயர்த்துகிறார் கௌதமன்.