அண்மையில் தமிழக முதல்வர் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு சென்று வந்த நிலையில் நேற்று உதகையில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் 'நாம் கேட்பதாலோ அல்லது நேரில் சென்று பேசுவதாலோ தொழில் முதலீடுகள் ஈர்க்க முடியாது என ஆளுநர் பேசியிருந்தார். இதற்கு திமுக அமைச்சர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் முதல் கட்டமாக 500 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் திறந்து வைக்கும் விழாவானது சென்னை தேனாம்பேட்டையில் விஜயராகவா சாலையில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''உலக அமைப்பே பாராட்டும் வகையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். நான் அதிகமாக தொழில்துறை சம்பந்தமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். அதற்கடுத்த கட்டமாக மருத்துவத்துறை சார்ந்த திட்ட விழாக்களில் தான் அதிகமாக கலந்து கொண்டு வருகிறேன். ஜூலை 15ஆம் தேதி கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனை திறக்கப்படும். கல்வியும் மருத்துவமும் திராவிட மாடல் அரசின் இரு கண்கள். ‘நகர்ப்புற நல்வாழ்வு மையம்’ திட்டம் இந்தியாவுக்கு முன்னோடியான திட்டமாக அமையப் போகிறது.
சுகாதாரத்தில் தேசிய அளவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும். மாநில வளர்ச்சி ஒருவருக்கு புரியவில்லை. மக்களை குழப்பும் வகையில் பேசி வருகிறார். சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பதைப் போல மக்களின் உடல்நலத்தில் தான் எல்லாமே அடங்கி இருக்கிறது. எனவே மக்கள் நலத் திட்டங்களை ஏராளமாகக் கொண்டு வர இருக்கிறோம். மருத்துவத்தை நவீனமயமாக்க வேண்டும். மருத்துவ ஆராய்ச்சிகள் நிறைய நடக்க வேண்டும். மருத்துவ வல்லுநர்களை உருவாக்க வேண்டும். இன்று 500 மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மக்களும் இதனை நல்ல வகையில் பயன்படுத்தி சிறப்பித்துத் தர வேண்டும்'' என்றார்.