கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில், 42 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், போதிய அளவில் திட்டப் பணிகளை நிறைவேற்றுவதற்கு, அரசு நிதி ஒதுக்காததால், பணிகளை செய்ய முடியாமல் ஊராட்சி மன்றத் தலைவர்கள் திணறி வருகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு, பண்ருட்டி ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவர்களின் கூட்டமைப்புத் தலைவர் வசந்தகுமாரி ஜெயராமன் தலைமையில் ஊராட்சி மன்றத் தலைவர்கள், பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ரவிச்சந்திரன் ஆகியோரை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனுவை அளித்தனர்.
அந்த மனுவில், ஊராட்சிகள் மூலம் பணியாற்றும் ஊழியர்கள், ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் சிறுசிறு பணிகள் ஆகியவற்றிற்கு, ஊதியம் வழங்குவதற்காக, கணக்கு எண் ஒன்றிலிருந்து நிதி வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதில் பொதுநிதி ஊராட்சி செலவினங்களுக்கு இல்லாததால், ஊராட்சிப் பணிகளை மேற்கொள்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும், தங்களது சொந்தப் பணம் மற்றும் கடன் வாங்கிதான் ஊராட்சிப் பணிகளைச் செய்து வருகிறோம்.
இதே நிலை நீடித்தால், கிராம ஊராட்சிகளில் முக்கியப் பணிகள் கூட செய்ய முடியாமல் சுணக்கம் ஏற்படும். பொதுமக்களுக்குத் தேவையான பணிகளைச் செய்ய முடியாத நிலை உருவாகும். எனவே, ஊராட்சிகளில் வேறு கணக்கிலிருக்கும் நிதியை ஊராட்சி மன்ற கணக்கு எண் 1-க்கு மாற்றம் செய்ய வேண்டும். சுமார் 5 லட்சம் அளவிற்குக் குறையாமல் நிதியை மாற்றித் தருமாறு அதிகாரிகள் ஆவனசெய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள், அதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாகக் கூறி உள்ளனர். அப்போது ஊராட்சி மன்றத் தலைவர்கள் மணப்பாக்கம் சியாமளா சுரேந்தர், எல்.என்.புரம் தமிழ்ச்செல்வி செல்வமணி, கீழிருப்பு முருகன், குடுமியான்குப்பம் கலியமூர்த்தி, கருக்கை கலைமணி உட்பட 20க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் கையெழுத்திட்ட அந்த மனுவை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.
ஊராட்சிப் பணிகளைச் செய்வதற்கு பொதுமக்களால் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் நிதி இல்லாமல் தடுமாறுகின்றனர். அரசும் அதிகாரிகளும் எப்போது நிதி நிலைமையைச் சரி செய்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.