GK Vasan ambassador?-AIADMK BJP competition to pull pmk

இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் திமுக தங்களுடைய கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முதற்கட்டமாக ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வருகிறது. அதேபோல் திமுக பணிக்குழு உறுப்பினர்களுடன் திமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகளைத் தொடங்கக் காத்திருக்கிறது.

இந்த நிலையில் நேற்று இரவு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பாமக நிறுவனர் ராமதாஸை நேரில் சந்தித்திருந்தார். அதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எடப்பாடி பழனிசாமி உடன் சந்திப்பு மேற்கொண்டிருந்த நிலையில், தற்போது டெல்லியில் உள்ள பாமக தலைவர் அன்புமணியை ஜி.கே. வாசன் நாடாளுமன்ற வளாகத்திலேயே நேரில் சந்தித்து ஆலோசித்ததாகத்தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ள நிலையில், பாமகவை தன்வசம் இழுக்க அதிமுக முயன்று வருகிறது. அதேநேரம் பாஜக பாமகவை தன்வசம் இழுக்க முயன்று வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் அன்புமணி ராமதாஸ் உடன் ஜி.கே. வாசன் சந்தித்திருப்பது அதிமுக - பாஜக இடையே பாமகவை இழுக்கும் போட்டா போட்டி எனக் கருதப்படுகிறது.

Advertisment

அதேநேரம் சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், வளர்மதி, ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன்,ஓ.எஸ். மணியன், செம்மலை, வைகைச்செல்வன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.