Skip to main content

“விஜய்யை தவிர மீதமுள்ள நடிகர்கள் யாரைக் கண்டு அஞ்சுகின்றனர்?” - ஜெயக்குமார் விமர்சனம் 

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
Former Minister Jayakumar condemns tamil actors

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் நேற்று (19-06-24) கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்து பலியானோரின் எண்ணிக்கை தற்போது 37 ஆக உயர்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர்  ஜிப்மர் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் எனப் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து திரைத்துறையினர் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘கள்ளச்சாராயத்தால் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மருத்துவமனையின் தூண்களிலும், சாலைகளிலும் கதறிக் கொண்டிருக்கும் காட்சிகள் கண்களை கலங்க வைக்கிறது.

இத்தனைக்கு பிறகும் திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒரு குரலும் வரவில்லை. நடிகர் விஜய் மட்டும் தனக்கு வாய்ப்பளித்து வளர்த்துவிட்ட தமிழர்களுக்கு இடர்நேரங்களில் துணை நிற்க வேண்டும் என உணர்ந்து குரல் கொடுத்துள்ளார். மீதமுள்ளவர்கள் யாரைக் கண்டு‌ அஞ்சுகின்றனர்? ஏழை எளிய மக்கள் 200.ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குவதால் தான் நீங்கள் 100 கோடி, 200 கோடி வரை சம்பளம் வாங்குகிறீர்கள்.

அந்த மக்களுக்கு இது போன்ற நேரங்களில் ஆதரவை கொடுக்க வேண்டிய சமூக பொறுப்பு உங்கள் அனைவருக்கும் கட்டாயம் இருக்கிறது. மானத்தமிழன் மாண்டு போவதை வேடிக்கை பார்க்கும் திரைத்துறையை‌ சார்ந்தவர்களை மக்கள் மன்னிக்க‌ மாட்டார்கள்’ என்று பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்