விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் அ.தி.மு.க. சார்பில் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுப்போம் என்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க.வினர் ஆட்சி செய்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி எத்தனை பேருக்கு வேலை கொடுத்தார். 10 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் எத்தனை பேருக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது.
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்குக் கிட்டத்தட்ட ஆயிரம் எஞ்ஜினியர்கள் வேலைக்கு எடுத்தனர். இவர்களில் ஒரு தமிழருக்கு கூட இல்லை. அத்தனை பேரும் வட இந்தியர்கள். ஜிப்மர் மருத்துவமனையில் வேலை கொடுங்கள், நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை கொடுங்கள். அரசு நிறுவனங்கள் எல்லாம் விற்று விட்டனர். இந்தியாவில் இரண்டு பேர் மட்டுமே வளர்ந்துள்ளனர். ஒருவர் அம்பானி மற்றொருவர் அதானி. பிரதமர் மோடி செல்லும் இடமெல்லாம் திருவள்ளுவர், தமிழ் என்று பேசுவார். ஆனால் மறுபுறம் இந்தி திணிப்பு.
மத்திய பா.ஜ.க. அரசு மதத்தின் பெயரால் நாட்டை துண்டாடப் பார்க்கிறது. அமைதியாக உள்ள தமிழகத்தில் அனைத்து சமூகத்தினரும் சமம். வழிபாட்டு உரிமை என்பது என்னுடைய உரிமை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூற பா.ஜ.க.வுக்கு உரிமை இல்லை” என்று ஆவேசமாக பேசினார்.