குரங்கணியில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு வனத்துறை அமைச்சர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்த அவரது அறிக்கை:
’’குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயில் சிக்கி 11 பேர் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. இந்த உயிரிழப்பிற்கும், அரசாங்கத்திற்கும் தொடர்பில்லாது போல தமிழக அரசு கை நழுவ முயல்வது ஏற்புடையதல்ல. ஒரு அசம்பாவித சம்பவம் ஏற்படுகிறது என்றால் அதை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளாமல் வனத்துறை அமைச்சர் அரசாங்கத்தின் மீது எந்தவொரு தவறும் இல்லாததை போல, மலைப்பகுதிக்கு சென்றவர்கள் அனுமதியே வாங்கவில்லை என்று சொல்லியிருக்கிறார். அனுமதி வாங்காமலே யார் வேண்டுமானாலும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வனத்திற்குள் செல்லும் நிலைதான் தமிழகத்தில் உள்ளதா ?. ஆனால் மலையேற்றம் சென்றவர்கள் முறையான அனுமதி பெற்றே குரங்கணி மலைக்கு சென்றதாக ஆதாரத்தை சமர்பித்திருப்பது விந்தையாக இருக்கிறது. இது ஆளுங்கட்சியினருக்கு புதிதல்ல.
கடந்த ஆண்டு வறட்சியினால் 400 –க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்த நிலையில் கூட, தமிழக அரசாங்க தரப்பில் விவசாயிகள் யாரும் வறட்சியால் உயிரிழக்கவில்லை என்றே விளக்கம் கூறப்பட்டது. ஆளுங்கட்சியானது மக்களுக்கு பிரச்சினை ஏற்படும் போது தகுந்த தீர்வை தர வேண்டுமே தவிர, பிரச்சினைக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லாதது போல தொடர்ந்து ஒவ்வொரு நிகழ்விலும் காட்டிக்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது. மலைப்பகுதிக்கு சென்றவர்கள் அனுமதி வாங்கினார்களா, இல்லையா என்பது கூட தெரியாத அமைச்சரை வனத்துறை அமைச்சராக வைத்திருப்பது நல்லதல்ல. வனப்பகுதிக்கான கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்காத காரணத்தில்தான் நக்சலைட்கள் மற்றும் தீவிரவாதிகள் ஊடுருவவும், உருவாகவும் மலைப்பகுதிகள் ஏதுவாக இருக்கிறது.
ஒரு தனியார் பேருந்து மற்றும் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நிகழும் போது அந்த நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறது. ஆனால் அரசாங்கத்தின் கவனக்குறைவால் நடைப்பெறும் எந்தவொரு உயிரிழப்பிற்கும் அந்த துறை அமைச்சர் கூட பொறுப்பு ஏற்று பதவி விலகாமல், சாதாரண வனத்துறை அதிகாரியை பதவி நீக்கம் செய்தது மக்களை முட்டாளாக்கும் செயல். எனவே வனத்துறை அமைச்சர் உயிரிழப்பிற்கு தார்மீக பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக முன்வர வேண்டும். காட்டு தீயில் சிக்கி உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். ’’