வேலூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக மாநகர மா.செ. அப்பு போட்டியிடுகிறார். திமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ கார்த்தி போட்டியிடுகிறார். இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், தத்தமது சமுதாயப் பிரமுகர்கள், மாநகரின் முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்நிலையில், மார்ச் 18ஆம் தேதி வேலூர் மாநகரம் தியாகராஜபுரத்தில் உள்ள அருண் மருத்துவமனைக்குச் சென்ற அதிமுக வேட்பாளர் அப்பு, மருத்துவர் அருணை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து தனக்கு ஆதரவாக ஓட்டுக்கேட்டார். இது திமுக வட்டாரத்தைக் கொதிப்படையச் செய்துள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய திமுக நிர்வாகிகள் சிலர், "இந்தத் தொகுதியை எதிர்பார்த்து கட்சிக்கு வந்தவர் அதிமுக அமைச்சரவையில் இடம்பெற்ற முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜய். இவர், சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தார். அவருக்கு இந்த தொகுதியை ஒதுக்கவில்லை. ஆனால், திமுகவில் மாநிலத் தேர்தல் பணிக்குழுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவரது மகன் தான் டாக்டர் அருண். அவரை சந்தித்து தான் அதிமுக வேட்பாளர் சால்வை அணிவித்து ஆதரவு கேட்டுவிட்டு வந்துள்ளார். அருண், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தருவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையுமில்லை. அப்பா மகன் இருவரும் ஒரே வீட்டில் தான் உள்ளனர். தனது தந்தை திமுகவில் பொறுப்பில் உள்ளார் என்பதும் அவருக்குத் தெரியும். அதிமுக வேட்பாளரும் அருணை சந்திப்பதற்கு முன், ‘நான் உங்களை வந்து சந்திக்கட்டுமா எனக் கேட்டுக்கொண்டே’ அங்கு சென்றிருப்பார். மகன் எதிர் வேட்பாளருக்கு ஆதரவு தருவது என்பது எப்படிச் சரியாகும்" என ஆதங்கப்படுகின்றனர்.