மின் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு திங்கள் முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வரும் திங்கள் முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10:30 மணி முதல் மாலை 5.15 மணி வரை ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். மின்வாரிய அலுவலகங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும், பண்டிகை தினங்களைத் தவிர்த்து அனைத்து நாட்களிலும் காலை 10:30 மணி முதல் மாலை 5.15 மணி வரை முகாம்கள் நடத்தப்படும் எனவும் தமிழக மின்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆதார் எண்ணை மின் இணைப்போடு இணைப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசத்தை ஆறு மாத காலத்திற்கு நீட்டிக்க வேண்டும். சிலிண்டர் மானியம் பெறுவதற்கு ஆதாரை இணைக்க வேண்டும் என மத்திய அரசு கூறியபோது திமுக எதிர்ப்பு தெரிவித்துவிட்டு இப்பொழுது மின் இணைப்போடு ஆதாரை இணைக்க வலியுறுத்துவது திமுகவின் இரட்டை வேடத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. திமுக அரசினுடைய இந்த நடவடிக்கையால் மின் நுகர்வோர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தெளிவுபடுத்தி, ஆதார் இணைப்பால் வருங்காலத்தில் எவ்வித நிபந்தனைகளும் விதிக்கப்படாது என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.' என தெரிவித்துள்ளார்.