தி.மு.கழக உயர் நிலை திட்டக்குழு உறுப்பினர்களில் ஒருவரான மு.பெ.சாமிநாதன் இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
பின்னர் பேசிய ஸ்டாலின்,
நான் நினைத்துப் பார்க்கின்றேன் மு.பெ.சாமிநாதன் இளைஞர் அணியின் மாவட்ட அமைப்பாளராக இருந்த போது, ஈரோடு மாவட்டத்தில் இளைஞர் அணியின் பாசறை கூட்டங்களை மண்ணாதபாளையம் எனும் இடத்தில் இரண்டு நாட்கள் நடத்தினோம்.
ஒரு பாசறை கூட்டத்தை எப்படி நடத்திட வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அந்த கூட்டத்தை நம்முடைய சாமிநாதன் அவர்கள் நடத்திக் காட்டினார். அப்படி நடைபெற்ற கூட்டத்தில் இரண்டு நாட்களும் பங்கேற்ற கழகத் தோழர்களுக்கும், இளைஞர்களுக்கும், உணவு வழங்கி உபசரிக்கும் பணியையும் அவர் தொடர்ந்து செய்தார். அந்தப் பணியை ஆற்றிக் கொண்டிருக்கும் பொழுது அவருடைய தாயார் சமையல் கூடத்தில் நின்றுகொண்டு பரிமாற கூடிய காட்சிகளை எல்லாம் நான் என்றைக்கும் நினைத்துப் பார்க்கிறேன்.
தி.மு.கழகம் ஒரு குடும்பம் என்பதற்கு இதெல்லாம் தான் ஒரு உதாரணம்.
ஏதோ குடும்பக் கட்சி - குடும்பக் கட்சி என்று சொல்கிறார்கள். இப்பொழுதும் சொல்கிறேன்... தி.மு.க குடும்ப கட்சிதான்!
அண்ணா இந்த இயக்கத்தை உருவாக்கிய நேரத்திலேயே, அண்ணன் - தம்பி, மாமா - மச்சான், அக்கா - தங்கை, என்றார். அதைத்தான் தலைவர் கலைஞர் அவர்கள் ஒரே வரியில், "என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே" என்று சொன்னார்.
எனவே, அந்த குடும்பப் பாச உணர்வோடு அவருடைய தாயார் உணவு பரிமாறிய அந்த காட்சியை எல்லாம் நான் நினைத்துப் பார்க்கிறேன். இந்த மேடையில் இன்றைக்கும் அவர் அமர்ந்திருக்கிறார்கள்.
எனவே, நம்முடைய சாமிநாதன் அவர்கள், அவருடைய இல்ல மணவிழா நிகழ்ச்சியை எழுச்சியோடு - மிகப் பெருமையோடு - பூரிப்போடு, நாமெல்லாம் பாராட்டும் அளவிற்கு அவர் இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.
தலைவர் கலைஞர் அவர்கள் இடத்தில் சாமிநாதன் அவர்கள் எந்த அளவிற்கு மரியாதை, மதிப்பு வைத்திருந்தார். அன்பை பொழிந்தாரோ, அதில் இம்மியளவும் குறையாமல் அதை இன்றைக்கும் என்னிடத்தில் காட்டிக் கொண்டிருக்கிறார்.
எனக்கு கிடைத்து இருக்கும் சில படைவீரர்கள் - தளபதிகள், அந்த தளபதிகளில் இளைஞர் அணியில் இருந்து ஒரு சிறப்பிற்குரிய இடத்தில், பட்டியலில் பெற்றிருக்கும் முக்கியமான ஒருவர் இருக்கிறார் என்று சொன்னால், நிச்சயமாக அது சாமிநாதன் அவர்களாகத்தான் இருக்கும்.
சில தோழர்கள், நம் முன்னோடிகள், கழகத்தில் நிலவும் சில பிரச்சினைகளை வந்து எடுத்துச் சொல்வார்கள். அப்படி சொல்கிறபோது நான் சில விளக்கங்களை சொன்னால் அதனை மறுத்தும் பேசுவார்கள். நியாயத்தை எடுத்துச் சொல்வார்கள். ஆனால், சாமிநாதன் அவர்கள் எதையும் மறுக்காமல் நியாயத்தை கூட எடுத்துச் சொல்லாமல் அதை அப்படியே, ஐந்தும் மூன்றும் 8 என்று நான் சொல்லாமல், 7 என்று சொன்னால்கூட அதை சரி என்று சொல்வார்.
அந்தளவிற்கு இந்த இயக்கத்தின் மீதும் எங்கள் மீதும் அளவுகடந்த பாசத்தையும் அன்பையும் தொடர்ந்து பொழிந்து கொண்டிருக்கக் கூடியவர்.
எனவே, இன்னும் அவரை பாராட்டினால் அது என்னையே பாராட்டிக் கொண்டிருப்பது போல் ஆகிவிடும். அதனால், நான் அதிகம் பாராட்ட விரும்பவில்லை. எனவே, இது நம்முடைய குடும்பத்தில் இருக்கும் திருமணமாக நான் மட்டுமல்ல இந்த மேடையில் இருக்கக்கூடியவர்களும், இங்கு வந்திருக்கக் கூடிய நீங்களும் அந்த உணர்வோடு தான் இங்கு வந்திருக்கிறீர்கள். இவ்வாறு பேசினார்.