Skip to main content

ஈரோடு கிழக்கில் ஏன் போட்டி? மனம் திறந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Published on 31/01/2023 | Edited on 31/01/2023

 

EVKS Elongavan press meet in erode

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரிப்பதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி கூறியுள்ளது. 30ம் தேதி இளங்கோவன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அலுவலகத்திற்குச் சென்று ஆதரவு கோரினார். அதனைத் தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 

 

இதை அடுத்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இத்தேர்தலில் பணப்பட்டுவாடா சம்பந்தமாக பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது குறித்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், “அது பற்றி எனக்கு தெரியாது. ஆனால், அவருக்கெல்லாம் பதில் சொல்ல நான் தயாராக இல்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு கட்சி கூட்டணிகளில் பல்வேறு கருத்துக்களை நான் தெரிவித்துள்ளேன். அதையும் வெட்டியும் ஒட்டியும் தற்போது சமூக ஊடகங்களில் வெளியிடுகிறார்கள். அதை நான் பொருட்படுத்தவில்லை. முதல்வர் மு.க. ஸ்டாலின், ஓய்வின்றி செயல்படுகிறார். கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவார். பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்குவார். 

 

குஜராத்தில் சிறுபான்மையினர்கள் படுகொலை குறித்த ஆவணப்படம் பி.பி.சி. வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நாங்கள் பிரதமர் மோடி தான் இதற்கு காரணம் எனக் கூறியுள்ளோம். இதேபோன்று எங்கள் தலைவர் ராகுல் காந்தி அதானி நிறுவனத்தின் ஊழல்கள் குறித்து கூறியுள்ளார். அதைத்தான் இப்போது அமெரிக்க நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. எனது தாத்தா பெரியார், எனது தந்தை சம்பத் எனது மகன் திருமகன் ஆகியோர் ஈரோட்டின் வளர்ச்சிக்குப் பல பணிகளை ஆற்றி உள்ளனர். அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்வதற்குத் தான் போட்டியிட ஒப்புக்கொண்டேன். 

 

கலெக்டராக இருந்தவர் துணை தாசில்தாராக பணியாற்றுவது போல போட்டியிடுவதை கருதலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை கலெக்டராக இருந்தாலும் அலுவலக உதவியாளராக இருந்தாலும் மக்கள் பணியாற்றுவதுதான் முக்கியம் என்பதாலேயே போட்டியிடுகிறேன். இதே போன்று சட்டமன்றத்திலும் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவரின் கீழ் மக்கள் பணியாற்றுவேன். எனக்குப் பதவி முக்கியமல்ல” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்