எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் குக்கிராமங்கள் முதல் பெரு நகரங்கள் வரை காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு இரண்டு மூன்று கோஷ்டிகளாக பிரிந்து தான் அந்நிகழ்வுகளை நடத்துகிறார்கள் அப்படித்தான் ஈரோட்டிலும்.
நீட் தேர்வு மற்றும் ஜெ.இ.இ. தேர்வுகளை ரத்து செய்ய கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆகஸ்ட் 28ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் மாநிலம் முழுக்க நடைபெறும் என கட்சி தலைமையால் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. அதன்படி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் ஜெ.இ.இ. தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ .பி. ரவி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். இவர்கள் முன்னாள் காங்கிரஸ் தமிழக தலைவராக இருந்த ஈரோடு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோஷ்டியினர் இதில் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், ஈரோடு மூலப்பாளையம் எல்.ஐ.சி. நகரில் நீட் தேர்வு மற்றும் ஜே.இ.இ. தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி தனியாக மற்றுமொறு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ ஆர்.எம். பழனிச்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இவர்கள் தற்போதைய தலைவர் கே.எஸ்.அழகிரி ஆதரவாளர்கள். இந்த ஆர்பாட்டத்திலும் பலர் கலந்து கொண்டனர்.
ஒரே நகரான ஈரோட்டில் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் இரண்டு ஆர்பாட்டம் நடத்தினார்கள். இது ஒன்றும் எங்களுக்கு புதுசு இல்லே, இதுதான் எங்களின் வழக்கமே என வெளிப்படையாகவும் அந்த பேரியக்கத்தை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.