Skip to main content

“நான் வேட்பாளராக ஒப்புக்கொண்டதன் காரணம்...” - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

Erode by-election Congress candidate Elangovan interview

 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரசின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரைக் களமிறக்கத் தீவிரம் காட்டி வருகிறது. அதிமுகவின் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என இருவரும் மாறி மாறி ஆதரவாளர்களைச் சந்தித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், திமுக மற்றும் காங்கிரசின் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு எஸ்டிபிஐ கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அண்ணாமலைக்கு எல்லாம் பதில் சொல்லுவது இப்பொழுது சரியாக இருக்காது. என்னைப் பொறுத்தவரை மக்களை சந்தித்து ஈரோட்டிற்கு நல்ல காரியங்களை செய்வதற்கு வாய்ப்பினைத் தாருங்கள் என்றும், என் மகன் விட்டுச்சென்ற பணியை தொடர்ந்து மேற்கொள்வதற்கு ஆதரவளித்து வாக்களியுங்கள் என்பதையும் வைத்துத்தான் பிரச்சாரம் செய்ய இருக்கிறேன். நான் திருவண்ணாமலைக்கு போக விரும்பவில்லை. அண்ணாமலைக்கும் பதில் சொல்ல விரும்பவில்லை. 

 

சீமான் மிக நல்ல நண்பர். ஆனால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கொள்கைகளை சொல்கிறார். ஆரம்பக்காலத்தில் பெரியாரை புகழ்ந்தார். இப்பொழுது கடுமையாக விமர்சனம் செய்கிறார். நான் வேட்பாளராக ஒப்புக்கொண்டதன் காரணம் நான் பிறந்த ஈரோட்டிற்கு நல்ல காரியங்களை செய்ய வேண்டும். பெரியார் ஈரோட்டின் நகர்மன்றத் தலைவராக இருந்து பல காரியங்களை செய்துள்ளார். என் தந்தை 1957-ல் திமுகவின் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று பல நற்காரியங்களை செய்துள்ளார். என் மகனும் இந்த ஒன்றரை ஆண்டுக்காலத்தில் பல நற்காரியங்களை செய்துள்ளார். சில தினங்களுக்கு பிறகு என் மகன் செய்த பணிகளின் பட்டியலை விநியோகிக்க இருக்கிறோம்.

 

பாராளுமன்றத்தில் இருந்தவர் இடைத்தேர்தலில் நிற்கின்றார் என என்னைப் பார்த்து சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை கலெக்டரால் செய்ய முடியாத ஒன்றை ஒரு பியூனால் செய்ய முடியும். கலெக்டராக இருந்தால் மேஜையில் பேனைவினை வைத்துக்கொண்டு மக்களுக்கு சேவை செய்ய முடியும். பியூனாக இருந்தால் மக்களோடு ஒருவராக இருந்து சேவை செய்ய முடியும். எனக்கு இரண்டும் ஒன்றுதான்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘2026 தேர்தலை எதிர்கொள்ள ஒருங்கிணைப்புக்குழு அமைப்பு’- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
DMK chief M.K.Stal's announcement Formation of coordination committee to face 2026 elections

2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுகவில் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பு மேற்கொள்ளப்படும் என தி.மு.க தலைவரும், தமிழக முதல்வரும் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, ‘2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கழகப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு தனது பணிகளை மிகச் சிறப்பாகச் செய்தது.

அதே வகையில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, கழகத்தில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள் - அமைப்பு ரீதியான சீரமைப்புகளைக் கழகத் தலைவருக்கும் தலைமைக்கும் பரிந்துரைக்கவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் “ஒருங்கிணைப்புக்குழு” பின்வருமாறு அமைக்கப்படுகிறது.

அதன்படி, அமைச்சர் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளைப் பரிந்துரைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்’ எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

முன்கூட்டியே துண்டு போடும் நிர்வாகிகள்; மேடையிலேயே கலாய்த்த அமைச்சர் உதயநிதி!

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
Minister Udhayanidhi spoke to administrators about   Deputy Chief Minister

திமுக இளைஞரணி 45வது ஆண்டு விழா இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி தலைமையில் தேனாம்பேட்டையில் நடந்தது. இதில் இளைஞரணி முக்கிய நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

அவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் உதயநிதி, “மக்களவை தேர்தலில் தமிழக மக்கள் பாஜகவிற்குப் பதிலடி கொடுத்துள்ளனர். அரசியல் களத்தில் எப்படி மக்களைச் சந்தித்துப் பேசுகிறோமோ அதேபோன்று இன்றைய காலத்தில் சமூக வலைத்தளமும் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் பொய்யையே பேசி, பொய்யையே பரப்பி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனை நாம் அம்பலப்படுத்த வேண்டும். அதனால் அனைவரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருங்கள்.

காலையில் எழுந்தவுடன் முரசொலியைத் தவறாமல் படித்துவிடுங்கள். முதல்வரின் அறிக்கைகள், அரசின் திட்டங்கள் என்னுடைய அறிக்கைகள், என அனைத்தையும் படித்துவிடுங்கள். முரசொலியில் தினமும் ஒரு பக்கத்தை இளைஞர் அணிக்கென்று ஒதுக்கி அதில் கருத்துகளை வெளியிட்டு வருகிறோம். முதல்வர் 234 தொகுதிகளிலும் நூலகம் அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதனையேற்று  முதற்கட்டமாக 50 தொகுதிகளிலும் நூலகத்தைத் திறந்துள்ளோம். மிதமுள்ள தொகுதிகளிலும் விரைவில் நூலகம் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கும், மக்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

தமிழ்நாடு முழுவதும் பேச்சு போட்டி நடத்தி 100 சிறந்த பேச்சாளர்களைத் தேர்ந்தெடுத்து தலைமையிடத்தில் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கட்டளையிட்டிருந்தார். அதன்படி அதற்கான பணிகளையும் தற்போது தொடங்கியிருக்கிறோம். இதற்காக 30 நடுவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை அனைத்து மாவட்டத்திற்கு அனுப்பி வைத்து பேச்சாளர்களைத் தேர்வு செய்யவுள்ளோம்.

இந்த மேடையில் அனைவரும் பேசி நான் துணை முதல்வராக வேண்டும் என்று தீர்மானம் எல்லாம் நிறைவேற்றினீர்கள். பத்திரிகையில் வரும் கிசுகிசுக்கள், வதந்திகள் எல்லாவற்றையும் படித்துவிட்டு வந்து இது நடக்கப்போகிறதோ என்று யூகத்தில் நாமும் ஒரு துண்டு போட்டு வைப்போம் என்ற அடிப்படையில் இங்கே பேசியுள்ளனர். இளைஞரணி செயலாளர் பொறுப்புதான் முதல்வரின் மனதிற்கு நெருக்கமான பொறுப்பு. நான் முன்பே கூறியதுபோல, எல்லா அமைச்சர்களுமே எங்களின்  முதல்வருக்குத் துணையாகத்தான் இருப்போம் என்றேன். அதேபோன்று இங்கே இருக்கக்கூடிய அனைத்து அமைப்பாளர்களுமே முதல்வருக்குத் துணையாகத் தான் இருப்போம்.

எனக்கு எவ்வளவு பெரிய பொறுப்பு வந்தாலும், என் மனதிற்கு நெருக்கமானது இளைஞரணி செயலாளர் பொறுப்புதான். ஆகையால் எந்த பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறந்துவிடமாட்டேன். நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலுக்கு உழைத்ததை போன்று வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் வெற்றிக்காக உழைப்போம். 2026 என்ன நடந்தாலும், எந்தக் கூட்டணி வந்தாலும் ஜெயிக்க போவதும் நம்முடைய கூட்டணிதான். அதைமட்டுமே இளைஞரணி தம்பிமார்கள் இலக்காக வைத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.