ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரசின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரைக் களமிறக்கத் தீவிரம் காட்டி வருகிறது. அதிமுகவின் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என இருவரும் மாறி மாறி ஆதரவாளர்களைச் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தல் தொடர்பாக ஈரோடு திண்டல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக இபிஎஸ் தரப்பினர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்நிலையில் ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்திருந்த முன்னாள் அமைச்சர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அனைவரும் இபிஎஸ் வருவார். பதில் தருவார் என்ற கருத்தில் தங்களது பதிலை கூறிவிட்டு நகர்ந்து சென்றனர்.
செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.சண்முகநாதன், “ஈரோடு கிழக்கு தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றிபெறும்” எனக் கூறினார். தொடர்ந்து வந்த ஆர்.பி. உதயகுமார், “அண்ணன் இல்லாமல் நான் வந்தால் சொல்லிவிடுவேன். அண்ணன் இருக்கும்பொழுது அண்ணன் தான் சொல்லணும்” எனக் கூறினார். தொடர்ந்து வந்த முன்னாள் அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் என அனைவரும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில்களை அளிக்காமல் கடந்து சென்றனர். இறுதியாக வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என ஒற்றை வரியில் கூறிவிட்டு நழுவினார்.
எனினும் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம், “நீங்களே தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவது போல் எண்ணி, தேர்தல் பணி ஆற்ற வேண்டும். இதுவரை நடைபெற்ற இடைத்தேர்தல்களில் ஈரோடு இடைத்தேர்தல் தான் மிகப்பெரிய வெற்றி சரித்திரம் படைக்க வேண்டும். மக்கள் பாராட்டும் அளவுக்கு பணியாற்ற வேண்டும். அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்ற பெருமையை காக்க வேண்டும்” எனக் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.