





அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் இன்று சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற இருக்கின்ற நிலையில் கூட்டத்தில் பங்கேற்க தனது இல்லத்திலிருந்து எடப்பாடி பழனிசாமி புறப்பட்டுள்ளார். இன்று அதிகாலை முதலே அதிமுக தொண்டர்கள் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தனியார் மண்டபத்தை நோக்கி படையெடுத்து வரும் நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமி சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அவரது வீட்டிலிருந்து வானகரம் புறப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவரிடம் ஆலோசனை நடத்தினார். அதேபோல் ஓபிஎஸ்க்கு 6 மாவட்டச் செயலாளர்கள் ஆதரவளித்திருக்கும் நிலையில் அவர்கள் 6 பேருடனும் ஓபிஎஸ் பொதுக்குழுவிற்கு புறப்பட இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. தற்போது பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ் கோமாதா பூஜை நடத்தி வருகிறார். மருதீஸ்வரர் கோவில் அர்ச்சகர் இந்த கோமாதா பூஜையை நடத்தி வருகிறார். கட்சியின் பொருளாளர் என்பதால் கட்சியின் வரவு செலவு கணக்கை ஓபிஎஸ் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஓபிஎஸ் வீட்டிற்கு முன்பு அவரது ஆதரவாளர்கள் அதிகமாக திரண்டுள்ளனர். நேற்று நள்ளிரவில் நடைபெற்ற விசாரணையில் அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தொடர்பான தீர்மானம் கொண்டுவர தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் கூட்டத்தில் பங்கேற்பார் என அவரது ஆதரவாளர் வைத்தியலிங்கம் தெரிவித்திருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.