உயரதிகாரிகளுக்கு அவங்க எதிர்பாராத வகையில் எல்லாம் ஜாக்பாட் அடிக்க ஆரம்பித்துள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அமைச்சர் வேலுமணிக்கு எதிராக, அறப்போர் இயக்கம் தொடர்ந்த ஊழல் வழக்கில், அந்த இயக்கம் அடுக்கிய ஊழல் புகார்கள் எல்லாம் உண்மைதானா என்று உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறையை விசாரிக்க கூறியது. அந்த வகையில் இதை எஸ்.பி. பொன்னி விசாரித்துக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் உத்தம பாளையத்தில் ஆர்.டி.ஓ.வாக இருக்கும் அவர் சகோதரர், பொள்ளாச்சிக்கு டிரான்ஸ்பர் ஆக விரும்பினார். உடனே அமைச்சர் தரப்பின் கவனத்துக்கு சென்றுள்ளது. அவரை பொள்ளாச்சிக்கு அனுப்பி வைத்து, தன் அன்பைக் காட்டியிருக்கிறார் மந்திரி. இந்தச் சூழலில் எடப்பாடியின் நன்மதிப்பைப் பெற கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருக்கும் 60-க்கும் மேற்பட்ட தி.மு.க. கிளைச் செயலாளர்களை அ.தி.மு.க.வுக்குக் கொண்டுவந்து விட வேண்டும் என்று அவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்கின்றனர்.
அதேபோல், இப்போது ஏ.டி.ஜி.பி., ஐ.ஜி., டி.ஐ.ஜி. அந்தஸ்த்தில் இருக்கும் காவல்துறை உயரதிகாரிகளுக்கு டிரான்ஸ்பர் பட்டியல் தயாராகிக் கொண்டுள்ளது என்கின்றனர். இவர்களில் சிலருக்கு பதவி உயர்வும் காத்திருப்பதாக சொல்கின்றனர். சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பதவியை ஒருசில அதிகாரிகள் இப்போது குறிவைத்துக் காய் நகர்த்த, முதல்வர் எடப்பாடியோ, புதுசாக இந்தப் பதவிக்கு வரும் அதிகாரி, விளம்பரப் பிரியராக இல்லாமல் இருக்கணும் என்று கூறியுள்ளார். க்ரைம் ரேட்டைக் குறைப்பதில் அக்கறை உள்ளவராவும் இருக்கணும்னு தன் விருப்பத்தைத் தனக்கு நெருக்கமான அதிகாரிகளிடம் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.