
தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டத்தினை தடை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அப்போது மசோதா மீதான விவாதத்தின் போது அனைத்துக் கட்சிகளில் இருந்தும் உறுப்பினர் ஒருவருக்கு இது குறித்து பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் அதிமுக சார்பில் இபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் பேசினார்.
இதன் பின் சபாநாயகர் அப்பாவு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்க்கு வாய்ப்பளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக சார்பில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை வரவேற்பதாக பேசி இருந்தார். இதற்கு இபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். இபிஎஸ் சபாநாயகரிடம் கூறும் போது, “ஒரு கட்சிக்கு ஒருவர் என்று பேச அழைத்தீர்கள். அதிமுக என்பது எங்கள் கட்சியாகத்தான் இருக்கிறது. நான் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறேன். எங்கள் சார்பாக தளவாய் சுந்தரம் பேசினார். மறுபடியும் இப்படி பேச விட்டீர்கள் என்றால் என்ன அர்த்தம்” எனக் கேட்டார். முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையிலேயே ஓ.பன்னீர்செல்வத்தை பேச அனுமதித்ததாக சபாநாயகர் அப்பாவு அதற்கு விளக்கம் அளித்தார்.
எடப்பாடி பழனிசாமியும், சபாநாயகரும் பேசிக்கொண்டு இருக்கும் போதே ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பிற்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதிமுக இபிஎஸ் ஆதரவாளர் கோவிந்தசாமியும் பன்னீர்செல்வம் ஆதரவாளரான மனோஜ் பாண்டியனும் ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவிந்தசாமியை அதிமுக இபிஎஸ் ஆதரவாளர்களும் மனோஜ் பாண்டியனை பன்னீர்செல்வமும் தடுத்து சமாதானப்படுத்தினர். தொடர்ந்து சபாநாயகரின் விளக்கத்தை ஏற்க மறுத்து அதிமுக இபிஎஸ் ஆதரவு உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்எல்ஏ ரவிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சிலர் சட்டப்பேரவையில் நிகழ்ந்த நிகழ்வுகளைக் குறிப்பிட்டு ஆபாசமாகவும், வெளியில் நடமாட முடியாது என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தனக்கு மிரட்டல் வந்த இரண்டு தொலைபேசி எண்களையும் குறிப்பிட்டு திருவல்லிக்கேணி போலீசில் புகாரளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.