எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற விவாதம் வந்தபோது தேனியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதுபோன்ற விவகாரங்களை பொதுவெளியில் பேசக்கூடாது என்று கட்சியின் தலைமையில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டதும், அந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. இருப்பினும் சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்படுவதும், கிழிக்கப்படுவதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஆண்டிப்பட்டி அருகே குன்னூர் டோல்கேட் பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. அந்த போஸ்டரில், ''எடப்பாடியாரை புறம் பேசுபவர்கள் இதை படித்த பின்னராவது திருந்தட்டும்'' என்ற தலைப்பில் அதிமுக அரசின் பல்வேறு திட்டப் பணிகள் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், மக்களின் முதல் அமைச்சர் எடப்பாடியாரை குறை சொல்லக்கூடாது, மீண்டும் எடப்பாடி வேண்டும் எடப்பாடி போன்ற வாசகங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், ராஜேந்திரபாலாஜி ஆகியோர் படங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த போஸ்டரில் எடப்பாடி பழனிசாமி படம் பெரியதாகவும், ஓ.பன்னீர்செல்வம் படம் சிறியதாகவும் இருந்தது.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தேனி மாவட்டத்தில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போஸ்டர்கள் திடீரென கிழிக்கப்பட்டது. போஸ்டர்களை கிழித்தது யார் என்று தெரியவில்லை என்றும், அதைத்தான் நாங்கள் விசாரித்துக்கொண்டிருக்கிறோம் என்றும் கூறுகின்றனர்.