இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை கொண்டுவந்த திமுக ஆட்சியின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடன் அளவு பற்றி எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டு மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை அளித்து, 2021இல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, இன்று இந்தியாவிலேயே கடன் வாங்கும் மாநிலங்களில் முதலிடம் என்ற சிறப்பைப் பெற்று, அளவுக்கு அதிகமாக கடனை பெற்றுள்ளது.
இதனை நான் சட்டமன்றத்திலும், பொது வெளியிலும் சுட்டிக்காட்டி, தமிழகத்தின் நிதி நிலைமை சீரழிந்து வருவதாக, நான் குறிப்பிட்டுப் பேசிய குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் அளிக்காமல், எனக்கு பொருளாதார நிதி மேலாண்மை குறித்து அடிப்படை புரிதல் இல்லை என்று தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். ஒரு சிறந்த நிதி நிர்வாகம் என்றால்: நிதிப் பற்றாக்குறையை கட்டுப்படுத்தி, வருவாய் பற்றாக்குறை அறவே நீங்குதல் - கடன் வாங்கும் அளவை கட்டுப்படுத்தி, வாங்கும் கடனை மூலதன செலவிற்கு செலவிட வேண்டும். இதுதான் சிறந்த நிதி நிர்வாகத்திற்கு அடையாளம் என்று நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது கூறியவர்கள், அப்போதைய எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள்; இன்றைய அமைச்சர்கள்தான்.
அப்போது உண்மையிலேயே நாங்கள் வாங்கிய கடனின் அளவு மாநில உற்பத்தி மதிப்பில் 25 சதவீதத்திற்குள்தான் இருந்தது. ஆனால், இப்போது திமுகவின் அரசில் கடன் சதவீதம் 26 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. இதையே நாங்கள் சொன்னால் எங்களுக்கு அடிப்படை புரிதல் இல்லை என்பதா?. திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. வருவாய் பற்றாக்குறையை நீக்கிவிட்டார்களா? குறைந்தபட்சம் அந்த அளவையாது குறைத்தார்களா? என்றால் இல்லை. எனவே, வருவாய்ப் பற்றாக்குறை எங்கள் ஆட்சியில் இருந்ததைவிட அதிகமாகிவிட்டது என்பதே உண்மை. இதற்கு அமைச்சர் விளக்கம் அளித்திருக்க வேண்டும். இதுதான் நிதி மேலாண்மையா? இதை சுட்டிக் காட்டினால் எனக்கு புரிதல் இல்லை என்று திமுக அரசின் நிதி அமைச்சர் எனக்கு பாடம் எடுக்கிறார்.
திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், இதுவரை மூன்று முறை மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுவிட்டது. இவற்றையும் மீறி, மாநில அரசு மின்சார வாரியத்திற்கு நிதி வழங்குகிறது என்றால், மின்வாரிய நிதி மேலாண்மை சீரழிந்துள்ளதையே இது காட்டுகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாட்டின் நிதி மேலாண்மையை மேம்படுத்துவோம் என்று மக்களை ஏமாற்றி, இதற்காக ஒரு உபயோகமற்ற சர்வதேச நிபுணர் குழுவையும் அமைத்து நிதிப் பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை, கடன் அளவு என எல்லா நிதிக் குறியீடுகளிலும் பின்னடைவை சந்தித்ததுதான் இந்த அரசின் சாதனை.
மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் அறிக்கை வெளியிடுவதை விடுத்து, வாக்குகளைப் பெறுவதற்காக மட்டும் திட்டங்களைப் போடாமல், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களையும் தீட்டி அவைகளை செயல்படுத்த, நல்ல நிதி மேலாண்மையில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்றும், எங்களுக்கு நிதி மேலாண்மை பற்றி பாடம் எடுக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.