பரபரப்பான சூழலில் நடந்து முடிந்து இருக்கிறது அதிமுக செயற்குழு - பொதுக்குழுக் கூட்டம். முழுவதும் ஓ.பன்னீர்செல்வத்தை கருத்தில் கொள்ளாமலே நடந்தது என்றே சொல்ல வேண்டும். ஆதரவு வட்டம் சுருங்கிவிட கிட்டத்தட்ட தனிமைப்படுத்தப்பட்டு அமர்ந்திருந்த பன்னீர்செல்வம் ஒரு கட்டத்தில் எழுந்து தனது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் போன்றோருடன் கிளம்பி வெளியேறினார்.
இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பும் கோஷங்களும் களைகட்டின. பேசியவர்கள் ஒவ்வொருவரும் அவரை புகழ்ந்து பாடினர். மேடையில் டென்சன் நிலவிய நிலையில் எடப்பாடியை நோக்கி பெரிய மாலையுடன் வந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின். எடப்பாடி பழனிசாமியின் கவனம் வேறுபக்கம் இருக்க, திடீரென பெஞ்சமின் மாலை அணிவிக்க, "வேண்டாங்க... அட இருங்க... என்னங்க நீங்க வேற சும்மா..." என்று டென்சன் ஆனார் இபிஎஸ்.
பிறகு பல்வேறு விஷயங்கள் நடக்க, வேறு எந்த தீர்மானங்களும் பேசப்படாமல், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பன்னீர்செல்வத்துக்கு எதிராகக் கூட்டம் நடந்து முடிய, மீண்டும் வேறொருவர் மாலை அணிவிக்க வந்தார். அப்போதும் டென்சன் ஆனார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், கோஷம் எழுப்பிய பொதுக்குழு உறுப்பினர்களை நோக்கி, வெற்றிக்குறி காட்டி மகிழ்ச்சியுடன் கையசைத்தார்.