Skip to main content

“நெசவாளர்களுக்கு மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும்” - இ.பி.எஸ். வலியுறுத்தல்!

Published on 06/10/2024 | Edited on 06/10/2024
EPS Emphasis for Subsidy should be provided to weavers immediately

நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய அரசு மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும். நெசவாளர்கள் உற்பத்தி செய்துள்ள துணிகளை, தமிழக அரசே கொள்முதல் செய்து தமிழக நெசவாளர்கள் இந்த ஆண்டு தீபாவளி திருநாளை சிறப்பாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க. ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 1200க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் இச்சங்கங்களை நம்பி உள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்திலும், தொடர்ந்து என்னுடைய தலைமையிலான அரசிலும் 10 ஆண்டுகளில் சுமார் 1400 கோடி ரூபாய் மானியத் தொகையாக சுமார் 2 லட்சம் நெசவாளர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு, நெசவாளர்கள் ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளை சிறப்பாகக் கொண்டாடினர்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2001-2006 ஆட்சிக் காலத்தில், தமிழ் நாட்டில் உள்ள மகளிர், குறிப்பாக கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களிடையே கைத்தறி சேலைகள் கட்டுவதை இயக்கமாகவே செயல்படுத்தி, நெசவாளர்களின் குடும்பத்தில் விளக்கேற்றியதை தமிழக மக்கள் யாரும் மறந்துவிட முடியாது. கடந்த ஓராண்டு காலமாக நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய தள்ளுபடி மானியத் தொகையை, இதுவரை முதல்வர் மு.க. ஸ்டாலினின் திமுக அரசு வழங்காததால், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் இந்த ஆண்டு தீபாவளி திருநாளை கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

EPS Emphasis for Subsidy should be provided to weavers immediately

மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலினின் திமுக அரசில் 2022, 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் பொங்கலுக்கு வழங்கப்பட்ட விலையில்லா வேட்டி, சேலைகள் நெய்வதற்கான பணிகள் முழுமையாக தமிழக நெசவாளர்களுக்கு வழங்கப்படாமல் வேறு மாநிலங்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டது என்றும், இதனால், பல நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பாதிக்கப்பட்டன என்றும் சட்டமன்றத்திலும், பேட்டிகள் வாயிலாகவும் நான் பலமுறை குறிப்பிட்டுள்ளேன். குறிப்பாக, எனது 05.08.2024 நாளிட்ட அறிக்கையில், இந்த ஆண்டு விலையில்லா வேட்டி, சேலை திட்டத்தில் குறித்த நேரத்தில் நெசவாளர் சங்கங்களுக்கு நூல் வழங்காமலும், வெளி சந்தையில் தரமற்ற நூல்களை விலைக்கு வாங்கியதாலும் ஏற்பட்ட இழப்புகள் குறித்து விசாரணை மேற்கொள்வதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன என்பதை நான் குறிப்பிட்டு, தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தேன். அதோடு, இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா 4 செட் சீருடைகளுக்கு பதில், 3 செட் சீருடைகள் மட்டுமே வழங்கியதாகவும், ஆனால், 4 செட் சீருடைகள் வழங்கியதாகக் கணக்கு காட்டி, இதன் மூலம் இந்த திமுக ஆட்சியாளர்கள், அரசுக்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்துவதாகவும் செய்திகள் வருகின்றன என்று எனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தேன்.

எனது தலைமையிலான அரசில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் லாபத்தில் நடைபெற்றன. ஆனால், 40 மாத கால முதல்வர் மு.க. ஸ்டாலினின் திமுக ஆட்சியில் ஒரு சில சங்கங்கள் தவிர, அனைத்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. பல கைத்தறி சங்கங்களின் நிலைமை அடி பாதாளத்திற்குச் சென்று இயங்க முடியாத நிலையில் உள்ளன. எனவே, உடனடியாக அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும், உற்பத்தி செய்து இருப்பில் உள்ள அனைத்து கைத்தறி துணிகளையும் தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செய்தது போல், தமிழக மகளிர் அனைவரும் மீண்டும் கைத்தறி சேலைகள் கட்டுவதை ஊக்கப்படுத்தவும் வலியுறுத்துகிறேன். மேலும், நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய அரசின் மானியத்தை உடனடியாக வழங்குவதுடன், கொள்முதல் செய்த துணிகளுக்கு உண்டான பணத்தையும், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு உடனடியாக வழங்கி, இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள நெசவாளர்கள் தீபாவளி திருநாளை சிறப்பாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ள்ளார். 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.